நியூயார்க் நகர மேயர் தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி

நியூயார்க் நகர மேயர் தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி



வாஷிங்டன், நவ.5–


அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.


அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது.


உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிட்டார். அதேபோல நியூயார்க்கின் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ சுயேச்சையாக களம் இறங்கினார்.


அக்டோபர் 25ம் தேதி ஓட்டுப்பதிவு தொடங்கி, நேற்று (4–ம் தேதி) வரை நடந்தது. அனைத்து வேட்பாளர்களும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியானது.


இதில் ஜோஹ்ரான் மம்தானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.


20 லட்சம் வாக்குகள் பதிவு


அதுமட்டுமின்றி, 1969–ம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவிலான வாக்குகளாக 20 லட்சம் வாக்குகள் பதியப்பட்டதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோஹ்ரான் மம்தானி மாம்டானி படைத்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய அரசியல் பதவிகளில் இளம் வயதிலேயே (வயது 34) இவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இவர் நடத்திய தீவிர தேர்தல் பிரச்சாரம் இவருக்கு இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறது.


ஜோஹ்ரான் மம்தானி அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். ஏனெனில் நியூயார்க் நகரம் அமெரிக்காவின் மிக முக்கியமான நகரமாகும். இந்த நகரில் நடக்கும் அரசியல் மாற்றம், நாடு முழுவதும் எதிரொலிக்கும். இந்த தேர்தல் சர்வதேச கவனத்தை பெற்றது. வெற்றி வாகை சூடிய, ஜோஹ்ரான் மம்தானிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


நேருவின் பேச்சை


மேற்கோள் காட்டினார்


நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி, தனது வெற்றி உரையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டியுள்ளார்.


தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றி உரையை நிகழ்த்திய ஸோரான் மம்தானி, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆகஸ்ட் 14, 1947 அன்று நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வெற்றி உரையை மேற்கொள்காட்டி, தனது பேச்சை தொடங்கினார். இந்த நொடிப்பொழுது வரலாற்றில் மிக அரிதாகவே வரும். ஒரு வரலாறு முடிவுக்கு வந்து மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது." என்ற நேருவின் பேச்சை மம்தானி மேற்கோள்காட்டினார்.


நிதி தரமாட்டேன்:


டிரம்ப் அச்சுறுத்தல்


மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான நிதியை நிறுத்துவேன் என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி இருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் தலைமையில் இருந்தால் அது மோசமாகிவிடும். அவர் திறமையானவர் இல்லை என்று அவர் குறை கூறியிருந்தார்.


உகண்டாவின் கம்பாலாவில் 1991–ம் ஆண்டு பிறந்தவர் ஜோஹ்ரான் மம்தானி. சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மீரா நாயர் இவரது தாயார். தந்தை கல்வியாளர் மஹ்மூத் மம்தானி. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் குழந்தை பருவத்தை கழித்த ஸோரான், 7 வயதில் நியூயார்க் நகரில் பெற்றோர்களுடன் குடிபெயர்ந்தார்.


போடோயின் கல்லூரியின் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும்போதே ஸோரானின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாலஸ்தீன் நீதிக்கான மாணவர்கள் என்ற அமைப்பை நிறுவினார்.


அஸ்டோரியா மற்றும் லாங் தீவு உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய 36-வது மாவட்டத்தின் பிரதிநிதியாக நியூயார்க் மாகாண அவைக்கு 2019–ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சிரியா நாட்டின் கலைஞர் ராமா துவாஜி என்பவரை இந்தாண்டு தொடக்கத்தில் ஸோரான் திருமணம் செய்துகொண்டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%