நிரந்தரப் பிரிவு

நிரந்தரப் பிரிவு



"அம்மா அப்பா பிரிந்து விட்டார்கள். சின்ன சின்ன சண்டையாக தினமும் நடந்து கொண்டிருக்கும். சமாதானம் ஆகிவிட்டார்கள் என்று நினைத்திருக்கிறேன்" மனோஜ் அழுது கொண்டே சொன்னான்.


"எதனால் சண்டை வரும் இருவருக்கும்?" சாந்திக் கேட்டாள்.


இவனுக்கும் பல நேரத்தில் புரிந்ததில்லை. பூடகமாகவே இருக்கும். தற்போது ப்ளஸ் டூ படித்து வருகிறான். இந்த நேரத்தில் எப்படிப்பட்ட மன உளைச்சல் பாவம்.


"தெரியவில்லை சாந்தி. எனக்கு என்ன பண்ணனும்னு தெரில. அம்மா தனது சாமான்களை எடுத்துக் கொண்டு பாட்டி வீட்டிற்குப் போய்விட்டாள். அப்பா வெளிநாடு போகப் போவதாக சொல்கிறார். நான்?"


கேள்வி சற்றுக் கூர்மையானதுதான். "நான் விசா ப்ராசஸ் முடிஞ்சதும் கிளம்புவேன். அதுக்கப்புறம் நீ அம்மாவிடம் போயிடு" இது அப்பா.


"இங்கெல்லாம் வந்துடாத. எனக்கு என்னைப் பாத்துக்கறதே கஷ்டம். அம்மா வயசானவங்க. நீ அப்பாவோடயே இருந்துக்கோ" இது அம்மா.


மனோஜ் என்ன செய்வான்? எதுவும் செய்யவில்லை. தனக்குள் பலமுறைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்தான். அப்பா ப்ளைட் ஏறியதும் வீட்டிற்கு வந்தான். தனது சாமான்கள், புத்தகங்கள் என சிலவற்றை எடுத்துக் கொண்டு பள்ளித் தலைமையாசிரியர் வீட்டிற்கு வந்தான். 


பள்ளித் தேர்விற்கு இரண டு மாதங்கள் இருக்கும் நிலையில் அவரிடம் நடந்தவற்றைக் கூறினான். அவருக்கு வியப்பாக இருந்தது.


நன்கு படிக்கும் மாணவன் மனோஜ். உள்ளே வரச்சொல்லி சாப்பிட வைத்தார்.    


"சொந்த வீடா?"

"ஆமாம் சார். அப்பாவோடது".

"பூட்டிட்டு வந்துருக்கியா"

"ஆமாம் சார். இன்னும் பர்னிச்சர்கள்லாம் இருக்கு.


"நா அம்மாகிட்ட பேசட்டுமா"

"வேண்டாம் சார். பரீட்சைகள் முடியட்டும். ரெண்டு பேருமே அவங்கள மட்டுமே நெனைச்சாங்க. நா என்ன பண்ணுவேன்னு யோசிக்கல. இப்போதைக்கு நா இங்க இருந்துக்கிறேன். பரீட்சைகள் முடிவதற்குள் உறவினர்கள் கேட்கும் கேள்விகள் என்னைத் துளைத்தெடுக்கும் சார். கொஞ்சம் உதவி பண்ணுங்க சார்" கிட்டத்தட்ட கெஞ்சினான் மனோஜ்.


பக்கத்து வீட்டு பத்தாங்கிளாஸ் படிக்கும் சாந்திக்கு போரடித்தது. சின்ன வயசிலேந்தே ஒன்னா விளையாடி, படிச்சு பாசத்துடன் பழகிய மனோஜ் தற்போது எங்கிருக்கிறான் தெரியவில்லை.


வார விடுமுறை முடிந்து பள்ளிக்கு கிளம்பத் தயாரானான் மனோஜ்.


தலைமையாசிரியர் மனோஜின் வகுப்பு ஆசிரியர்களை அழைத்து நிலைமையை எடுத்துச் சொன்னார்.


பரீட்சைகள் முடிந்து விடுமுறையும் ஆரம்பமானது. இவனுக்கு அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது.  


முதல்நாள் போனில் வாழ்த்தியப் பெற்றோர்களை வெறுத்தான். இரண்டு மாதங்களாக பூட்டிக் கிடக்கும் வீடு.  


அப்பா வெளிநாடு சென்றதைக் கூட அறியாத அம்மா. பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கும் அம்மாவைப் பிரிந்த தந்தை. என்ன செய்வான்?


தானே ஒரு முடிவுக்கு வந்தான். வாட்சாபில் மெசேஜ் அனுப்பினான்.


தான் மேற்படிப்பு படிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும். நல்ல நிலைமைக்கு வந்ததும் பணத்தைத் திருப்பித் தருவதாக சொல்லி எழுதினான்.


அம்மா அழுகை ஸ்மைலியும், அப்பா ஆச்சர்ய ஸ்மைலியும் அனுப்பினார்கள்.


தன் வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து சோபாவில் அமர்ந்து முட்டி நின்ற கண்ணீரைப் பிழிந்தான்.


சாந்தியின் அப்பா வந்தார். அருகில் அமர்ந்து பேசினார். சாப்பாடு கொண்டு தந்தார். சாந்தி பத்தாம் வகுப்பு பரீட்சையில் பிசியாக இருந்தாள்.


அவர் அவனை அழைத்துக் கொண்டு அவன் அம்மா வீட்டிற்கு சென்றார். ஒரு ஹால், ஒரு கிச்சன் தான். அம்மாவும் அம்மாச்சியும் இருந்தார்கள். "குழந்தையை ஒரு முறை கூட பார்க்க வரவில்லையே" என்றதும் கண்ணீர் பொலபொலவென வர கதறி அழுதாள்.


தானும் மனோஜின் அப்பாவும் ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் போது தான் காதலித்தவனை திருமணம் செய்ய முடியாமல் போனதையும், மனோஜின் அப்பா ஆறுதல் கூறி தன்னைத் திருமணம் செய்து கொண்டதையும் தெரிவித்தாள்.


இதுவே தாங்கள் பிரியவும் காரணம் என்றாள். ஒவ்வொரு நாளும் தான் வாழ்க்கைக் குடுத்ததாகவும், அந்த காதலித்து ஏமாற்றியவனை ஒப்பிட்டுப் பேசிப் பேசி மனதை ரணமாக்கியதும் தாங்க முடியாமல் பிரிந்ததைச் சொன்னாள்.


கணவனைப் பிடிக்காமல் போனதும், நாளை விபரம் தெரிந்ததும் மகனும் தன்னை ஒதுக்கி விடுவான், இல்லையேல் மதிக்க மாட்டான் என்ற முடிவில்தான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பிரிந்து வந்து விட்டதாகக் கூறி அழுதாள்.


மனோஜ் அம்மாவைக் கட்டிக் கொண்டான். கண்களைத் துடைத்து அம்மாவையும் அம்மாச்சியையும் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்தான்.


அப்பாவிற்கு தலைமையாசிரியர், சாந்தியின் அப்பாவின் உதவியுடன் தன் அம்மாவிற்கு ஜீவனாம்சம் கேட்டும், முறைப்படி விவாகரத்துக் கேட்டும், தனக்கென அந்த வீடு வேண்டுமென்றும் கேட்டு நோட்டீஸ் அனுப்பினான்.


கோர்ட்டுக்கு வந்த அப்பாவிடம் பேசி, புரியவைத்து "உங்கள் அன்பு எங்கள் இருவருக்குமே வேணும்ப்பா" என்றான்.


இதோ விமான நிலையத்தில் மனோஜ் அப்பா அம்மாவுடன். அம்மாச்சி பொக்கைவாய்ச் சிரிப்புடன் வழியனுப்பி வைக்க வெளிநாட்டு வாழ்க்கைத் துவங்கப் போகிறது. கவலைகள், வருத்தங்களிலிருந்து நிரந்தரமாய் விலகி சந்தோஷமாய் வாழப் போகிறான்.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%