நீயாவது நடப்பா

நீயாவது நடப்பா



பள்ளிக்கூடத்தின் மணி அடிக்க இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் மாணவர்கள் வேகவேகமாக நடந்தனர்.


அதிகபட்ச வேகத்தின் காரணமாய் முருகனின் செருப்பு அறுந்து விட அவனால் மேற்கொண்டு நடக்க இயலவில்லை. 


பின்னே?... வருடக் கணக்கில் பயன்படுத்தப்பட்டு தேய்ந்து, பல தடவை தையல்களை வாங்கி, நைந்து போன அந்தச் செருப்பு எப்படி தாங்கும்?.


அறுந்து போன செருப்பை அட்ஜஸ்ட் செய்தபடி மெல்ல மெல்ல காலை இழுத்து இழுத்து நடந்த முருகனைப் பார்த்து சக மாணவர்கள் கேலியாகச் சிரித்தனர்.


  "ஏண்டா... எத்தனை வருஷமாடா இதே செருப்பை போட்டுட்டிருப்பே?... பாவம்... அந்தச் செருப்புக்கு மட்டும் வாய் இருந்திருந்தா கதறி அழுதிருக்கும்" என்றான் ஒருவன்.


 "செருப்புன்னு ஒண்ணு கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் உருவான செருப்புடா இது" மற்றொருவன் கிண்டல்.


அவமானம் பிடுங்கித் தின்றது முருகனை.


 "ஹும்... நானும் அம்மாவிடம் 100 தடவை கேட்டுட்டேன் 'வேற செருப்பு வாங்கி கொடு!'ன்னு எப்பக் கேட்டாலும் ஒரே பதில் "இந்த மாசம் காசுக்கு ரொம்பத் தட்டுப்பாடா இருக்குதுப்பா... அடுத்த மாசம் கண்டிப்பா வாங்கி தர்றேன்" இதே பதில்தான் நூறு தடவையும்.


 "என்ன முருகா இப்படியே இழுத்து இழுத்து நீ நடந்து வந்து சேர்றதுக்குள்ள லன்ச் பெல்லே அடிச்சிடுவாங்க ஸ்கூல்ல"


எல்லோரும் வேகமாகச் சென்று குறித்த நேரத்தில் வகுப்புக்குள் நுழைந்து விட, லேட்டாய்s சென்று நின்றான் முருகன்.


 "சார் அவனோட ஆதிகாலச் செருப்பு அறுந்து போச்சு சார்... அதனால தான் ஐயா லேட்டு சார்" என்றான் கடைசி பெஞ்சிலிருந்து ஒருவன்.


அழுதபடியே தன் பெஞ்சில் சென்று அமர்ந்தான் முருகன்.


மறுநாள்.


இன்று செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் போக வேண்டியிருந்ததால், மற்றவர்களின் கேலிக்குப் பயந்து, எல்லோரும் சென்ற பின் தனி ஆளாய் நடந்தான் முருகன்.


 "தம்பி"


யாரோ அழைக்கும் குரல் கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தான் முருகன்.


சாலையோரம் அமர்ந்திருந்த அந்தப் பிச்சைக்காரர்தான் அவனை அழைத்திருந்தார்.


  "என்ன?" இங்கிருந்தே கேட்டான் முருகன்.


  "கொஞ்சம் இங்க வாப்பா"


ஒரு பிச்சைக்காரன் அழைத்து நாம் செல்வதா? என்று சில நிமிடங்கள் யோசித்தவன், "சரி போய்த்தான் பார்க்கலாமே!" சென்றான்.


தரையில் அமர்ந்திருந்த அந்த பிச்சைக்காரர் தன் முதுகுக்கு பின்னாலிருந்த ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து அவனிடம் நீட்டினார். 


  "இந்தாப்பா... உனக்குத்தான் என்னோட பரிசு!.. வெச்சுக்கோ!"


கண்களைச் சுருக்கிக் கொண்டு வாங்கி, நிதானமாய்ப் பிரித்தான் முருகன்.


உள்ளே 


புத்தம் புதுச் செருப்பு.


  "தம்பி நேத்து உன்னோட செருப்பு அறுந்து போனதையும், அதைப் பார்த்து உன்னோட நண்பர்கள் கேலி செய்ததையும் நான் இங்கிருந்தே பார்த்தேன் தம்பி... எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தது அதனாலதான் உனக்காக இந்தச் செருப்பை வாங்கி வந்தேன்"


அப்போது அவர் இடுப்பிற்கு கீழே கூர்ந்து பார்த்த முருகன் ஆடிப் போனான். அந்தப் பெரியவருக்கு இடுப்பிற்குக் கீழே இரண்டு கால்களும் இல்லை.


  "என்னப்பா பார்க்கறே?... உனக்கு செருப்புத்தான் இல்லை... எனக்கு ரெண்டு கால்களே இல்லை... வாழ்க்கைல ஆயிரக்கணக்கான கேலிகளையும்... கிண்டல்களையும் தண்டி வந்தவன் நான்!... அதனாலதான் அவங்க உன்னைக் கிண்டல் செய்த போது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு!"


மனசு கனத்துப் போனது முருகனுக்கு.


 "சந்தோசமா... இப்பவே இந்தச் செருப்பைப் போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு போய்... நேத்திக்கு உன்னை கேலி பண்ணினாங்க பாரு... அந்தப் பசங்க முன்னாடி.....ஒரு ராஜ நடை நடந்து காட்டுப்பா" சொல்லி விட்டு அந்த பிச்சைக்காரர் தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட.


முருகனும் தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி விட்டு, "நன்றிங்க ஐயா" என்று சொல்லி விட்டு பள்ளியை நோக்கி நடந்தான் காலில் அந்தப் புதுச் செருப்புடன்.


(முற்றும்)


முகில் தினகரன்

 கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%