புதுடில்லி: 'மனிதர்களாலும், வணிக நோக்கங்ளுக்காகவும் வன விலங்குகளின் வழித்தடம் தடுக்கப்படும்போது, பாதிக்கப்படும் விலங்குகளுக்கு சாதகமாகவே நீதிமன்றங்கள் எப்போதும் செயல்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் நீலகிரியில் உள்ள சிகூர் பகுதியில், யானை வழித்தடங்களை தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து வனப்பகுதியை காலி செய்யும்படி கேட்கப்பட்டதால், வனவிலங்குப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் 39 ரிசார்ட்டுகள், 390 வீடுகள் உட்பட 800க்கும் மேற்பட்ட கட்டுமானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அக்கட்டுமானங்கள் பாதிக்கப்படும் என்பதால், தமிழக அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிகூர் பகுதியில் உள்ள யானை வழித்தடங்களில் தனியார் தரப்பினரால் வாங்கப்பட்ட நிலங்கள் சட்டவிரோதமானவை எனவும், இந்தக் கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும், கடந்த செப்டம்பர் 12ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் எம்.பஞ்சோலி அமர்வு விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித் மற்றும் ஷோயப் ஆலம் ஆகியோர், 'இந்த ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் யானை வழித்தடங்கள் அறிவிக்கப்படும் முன்பே, சொத்துகளை வாங்கி தங்கள் தொழிலை நடத்தி வருகின்றனர்.
'எனவே, இத்தொழிலை மேலும் விரிவுபடுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டனர்.
அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், “நீலகிரியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளின் உரிமையாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, விரிவான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. யானை வழித்தடத்தில் வணிக நோக்கங்களுக்காக இருக்கிறீர்கள்.
“இந்தக் கட்டுமானங்கள் யானைகளின் நடமாட்டத்திற்கு இடையூறாக உள்ளன. இதனால், பாதிக்கப்படும் விலங்குகளுக்கு சாதகமாகவே நீதிமன்றங்கள் எப்போதும் செயல்படும்,” எனக் குறிப்பிட்டு வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.