பாகிஸ்தான் எங்களுக்கு இணையான சவால் அளிக்கக்கூடிய அணி அல்ல’: இந்திய கேப்டன் சூர்யகுமார் பேட்டி
துபாய், செப்.23-
‘பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு இணையான போட்டியாளர் அல்ல’ என கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த சூப்பர்4 சுற்றின் 2-வது லீக்கில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. இதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 172 ரன் இலக்கை இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா (74 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர் ), சுப்மன் கில் (47 ரன்) ஆகியோ ரின் சரவெடி ஜாலத்தால் 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான்.
20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் 15-வது முறையாக மோதியுள்ள இந்திய அணி அதில் ருசித்த 12-வது வெற்றியாக இது பதிவானது.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘முந்தைய லீக்குடன் ஒப்பிடும் போது இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் தரம் உயர்ந்து இருக்கிறதா? என கேட்டனர்.
அதற்கு சூர்யகுமார் யாதவ், ‘இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சரியான போட்டி அளிக்கக்கூடிய அணியாக பாகிஸ்தான் இருப்பது போன்று நினைத்து என்னிடம் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஒரு அணியின் தரமும், சவாலும் ஒன்று தான். அதாவது சிறந்த அணி என்றால் கடும் சவால் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக இரு அணிகள் 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் முடிவு 8–-7 அல்லது 7-–8 என்று இருந்தால், சபாஷ் சரியான எதிராளி என்று வர்ணிக்கலாம். ஆனால் நாங்கள் 13–-0, 10–-1 என்ற ரீதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறோம். சரியான புள்ளி விவரம் எனக்கு தெரியவில்லை. இருப்பினும் இனி அவர்கள் எங்களுக்கு நிகரான போட்டியாளர் கிடையாது. ஏனெனில் அவர்களை விட நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறோம்’ என்றார்.
இந்த ஆட்டத்தில் திருப்புமுனை எது என்று சூர்யகுமாரிடம் கேட்ட போது, ‘பாகிஸ்தான் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்திருந்த போது, கொண்டு வரப்பட்ட குளிர்பான இடைவெளி தான் ஆட்டத்தின் திருப்புமுனை என்று சொல்வேன். அதன் பிறகு வீரர்கள் தங்களது தோரணையை மாற்றி விட்டனர். பொதுவாக ‘பவர்-பிளே’க்கு பிறகு ஆட்டத்தின் போக்கு மாறுவதை நாம் பார்ப்போம். ஆனால் இன்றைய ஆட்டத்தில் 10 ஓவர்களுக்கு பிறகு தான் இந்த ஆடுகளத்தில் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம். சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினர்.
ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவின் பந்து வீச்சு (2 விக்கெட்) தான் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். பயிற்சியின் போது அவர் பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகமாக உழைக்கிறார். இந்த ஆட்டம் தான் அவருக்கு பந்து வீச்சில் சரியான வாய்ப்பை கொடுத்திருக்கிறது. அவர் எப்போதும் குறைந்தது 2 ஓவர்கள் வீச வேண்டும் என்று விரும்புவார். ஆனால் இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை முழுமையாக வீசியிருக்கிறார். அதனால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் பந்து வீசிய விதம், அவர் ரொம்ப தெளிவான திட்டமிடுதலுடன் செயல்பட்டதை காட்டியது. இது போன்று அவர் எப்போதும் பந்து வீச வாய்ப்பு கிடைத்தாலும் அணிக்காக அதை செய்ய தயாராகவே இருக்கிறார்.
தொடக்க கூட்டணியான அபிஷேக் ஷர்மாவும், சுப்மன் கில்லும் நெருப்பு, ஐஸ் போன்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு விளையாடுகிறார்கள். இருவரும் சேர்ந்து ஆடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா கூறுகையில், ‘பாகிஸ்தான் இன்னும் துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பவர்-பிளேயிலேயே (முதல் 6 ஓவரில் 69 ரன்) அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை எங்களிடம் இருந்து பறித்து விட்டனர். நாங்கள் முதல் 10 ஓவர்கள் ஆடிய விதத்தை பார்க்கும் போது, இன்னும் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். இருப்பினும் 171 ரன் நல்ல ஸ்கோர் தான். ஆனால் பவர்-பிளேயில் அவர்கள் அருமையாக விளையாடி விட்டனர். அது தான் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது’ என்றார்.