விடிந்தால் புத்தாண்டு. மாலை ஆக ஆக தீபக்குக்கும் அவனது நண்பர்களுக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.ஒவ்வொரு ஆண்டு கடைசி நாளிலும் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவான் தீபக்.
அவன் இருக்கும் தெருவை அடைத்து கலர் கலர் தோரணங்களைக் கட்டி அசத்தி விடுவான். ஸ்பீக்கர் செட்டும்
நண்பர்களின் நடனமும் என்று தெருவே அமர்க்களப்படும். தெருவின் ஆரம்பத்தில் இருந்து
சாலையில் ஹாப்பி நியூ இயர்
என்று பெரிய பெரிய எழுத்துக்களில் பெயிண்டால் எழுதிவிடுவார்கள். நண்பர்கள் அனைவரின் பெயர்களையும்
கீழே எழுதி தெருவாசிகள் அனைவரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துவிடுவார்கள்.
வீடுகளில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் வயதானவர்களைப் பற்றியோ
படிப்பில் கவனம் செலுத்தும்
மாணவர்களைப் பற்றியோ கொஞ்சம் கூட பொருட்படுத்த மாட்டார்கள். பரத் கொஞ்சம் வசதியான விட்டுப் பையன் என்பதால் செலவுகள் அனைத்தையும் அவனே மொத்தமாக செய்து விடுவான்.
கொண்டாட்டம் எல்லாம் முடிந்தவுடன் நண்பர்கள் அனைவரும் அதைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் உண்டான தொகையை அவனிடம் கொடுத்து விடுவார்கள். பல ஆண்டுகளாக இப்படித்தான் நடந்து வருகிறது.
தீபக்கின் அம்மா கமலத்துக்கு அவன் இப்படிச் செய்வது கொஞ்சம் கூடப் பிடிக்காது.
"தீபக்! இப்படி எல்லாம் செய்யாதடா.
காசை வீண்பண்ணாதே ! நீ இன்னைக்கு ஒரு நாள் செலவு செய்யற பணம் இருந்தா உன் படிப்பு செலவுக்கே கூட உதவும் இல்லையா? "என்று எவ்வளவோ சொல்லியும் அவன் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை .
அன்று இரவு 9 மணி. அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி
பணத்தைப் பெற்றுக் கொண்டு
நண்பர்களிடம் உற்சாகமாக ஓடினான் தீபக். வழியில் மூடிக்கிடந்த ஒரு கடை வாசலில் நடுங்கும் குரலில் ஒரு வயதான பெண்மணி "தம்பி!" என்று அழைக்கும் குரல் கேட்டு நின்றான்.
"எதிரில் இருக்கும் டீகடையில்
சூடா ஒரு டீ வாங்கித் தருவியா?
இந்தா காசு" என்றவளுக்கு டீ வாங்கி கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்தான்.
'எப்படித்தான் அந்தக் கிழவி
இந்த குளிரில் அங்கே படுத்து இருக்கிறதோ பாவம்' என்று நினைத்துக் கொண்டு சென்றவனுக்கு பளிச்சென்று மின்னல் வெட்டியது மாதிரி புதிய சிந்தனை தோன்ற அந்த நேரத்திலும் திறந்திருந்த ஜவுளிக்கடையை நோக்கி ஓடினான் .அம்மாவிடம் வாங்கி வந்த பணத்தில் கம்பளி ஒன்று வாங்கி வந்து நடுங்கிக் கொண்டு படுத்திருந்த கிழவியின் மேல் போர்த்தி விட்டு வீட்டை நோக்கி ஓடினான்.
புத்தாண்டு அவனுக்கு நல்லபடியாக பிறந்து கொண்டிருந்தது.

மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903