பிஹாரில் 121 தொகுதியில் இன்று வாக்குப்பதிவு

பிஹாரில் 121 தொகுதியில் இன்று வாக்குப்பதிவு



 

பாட்னா: பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தில் இன்று 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பிஹாரில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.


மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.


மாநிலத்தில் மொத்தம் 7.43 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதில் 3.92 கோடி பேர் ஆண்கள். 3.51 கோடி பேர் பெண்கள். முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று (6.11.2025) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இறுதிக் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் நேற்று பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தனர்.


முதல் கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,192 பேர் ஆண்கள், 122 பேர் பெண்கள். ஆர்ஜேடி மூத்த தலைவரும் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், ராகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சதீஷ் குமார் களமிறங்கி உள்ளார். கடந்த 2 தேர்தல்களில் தேஜஸ்வி யாதவ் இந்த தொகுதி யில் வெற்றி பெற்றிருக்கிறார்.


பிஹார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரி , தாராபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆர்ஜேடி சார்பில் அருண் ஷா களமிறங்கி யிருக்கிறார். லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ஆர்ஜேடி கட்சியில் இருந்து விலகி ஜன சக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அவர் மஹூவா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆர்ஜேடி சார்பில் முகேஷ், எல்ஜேபி (ராம் விலாஸ்) சார்பில் சஞ்சய் குமார் சிங், ஜன் சுராஜ் சார்பில் இந்திரஜித் பிரதான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


பிஹார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் குமார் சின்ஹா, லக்கிசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் சுராஜ் குமாருக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: பிஹாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் 3.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 45,341 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும்.


16 தொகுதிகளில் பதற்றம்: பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 16 தொகுதிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன. அந்த தொகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடையும். ஒரு தொகுதியில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மட்டும் 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.பிஹாரில் வரும் 11-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும். அப்போது 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%