பூந்தமல்லியில் பள்ளி வேனில் 2 சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் - பெண்ணுக்கு 17 ஆண்டு கடுங்காவல் சிறை

பூந்தமல்லி அருகே பள்ளி வேனில் பயணித்த சிறுவர்கள் 2 பேருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்த பெண்ணுக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பூந்தமல்லி அருகே உள்ள கொளப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் பள்ளி வேன் மூலம் வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்த வேனில், நடத்துனரான பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பாஸ்கர் (48), உதவியாளராக கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த இந்திரா (48) ஆகிய இருவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலையில் வேனில் பயணித்த பள்ளி சிறுவர்-சிறுமிகளில், இரு சிறுவர்களுக்கு பாஸ்கர், இந்திரா ஆகிய இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்துள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்ஆர்எம்சி (போரூர்) அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கர், இந்திரா ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூரில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுக்கு வராத நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு பாஸ்கர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், இந்திரா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
ஆகவே, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி நேற்று அளித்தார். அதில், இந்திராவுக்கு 4 சட்டப்பிரிவுகளின் கீழ், 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், தீர்ப்பின்போது, மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய தனியார் பள்ளி நிர்வாகத்தையும், வழக்கை சரியான முறையில் விசாரிக்கத் தவறிய எஸ்ஆர்எம்சி (போரூர்) அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரையும் நீதிபதி கண்டித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?