மகளிர் உலகக்கோப்பை: மத்தியப் பிரதேச வீராங்கனைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு
போபால்,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தங்களது முதல் மகுடத்துக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்டின.
மழை காரணமாக ஆட்டத்தை தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரையிறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர். இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வோல்வார்ட் 101 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளும் அள்ளினர்.
வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய இந்திய பெண்கள் அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மத்திய பிரதேச வீராங்கனையான கிராந்தி கவுடுக்கு 1 கோடி ரூபாய் வெகுமதி பரிசாக வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி மோகன் யாதவ் அறிவித்துள்ளார். அத்துடன் இந்திய அணிக்கும் அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
22 வயதான கிராந்தி கவுடு இந்த மகளிர் உலகக்கோப்பையில் 8 போட்டிகளில் 5.73 என்ற எகானமி ரேட்டில் பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?