மதுரையில் சோழன் டூர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெண்கள் இ-–ஆட்டோ ஓட்டுநர் திட்டம் தொடக்கம்
மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில், சோழன் டூர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரையில் பெண்கள் இ-ஆட்டோ ஓட்டுநர் திட்டம் சிறப்பாகத் துவங்கப்பட்டது.
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இந்தியாவின் 14 நகரங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், பெண்கள் முன்னேற்றத்தை 2025-ஆம் ஆண்டிற்கான முக்கிய சமூக இலக்காக அறிவித்துச் செயல்பட்டு வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சுற்றுலாத் துறையில் சேவையாற்றி வரும் சோழன் டூர்ஸ் நிறுவனம், உலக சுற்றுலா விருது உள்ளிட்ட ஐந்து தேசிய விருதுகளைக் குடியரசுத் தலைவரிடமும், தொடர்ந்து பல்வேறு மாநில விருதுகளைத் தமிழ்நாடு அரசிடமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய நிறுவனத்தின் நிறுவனர் பாண்டியன் குமரவேல், "உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டியது. அது எங்களைச் சுற்றியுள்ள சமூகங்களில் நாம் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தில்தான் இருக்கிறது. இந்த நம்பிக்கையே எங்களைப் பெண்கள் இ-ஆட்டோ திட்டத்தைத் தொடங்க ஊக்குவித்துள்ளது" எனக் கூறினார். பெண்கள் மேம்பாடு, அவர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பான நகரப் போக்குவரத்தை மையமாகக் கொண்டு இந்த முன்னோடி முயற்சி மதுரையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு:
இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இ-ஆட்டோக்கள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், பெண்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு, தொழில்முறை அணுகுமுறை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட சேவையும் உறுதி செய்யப்படுவதாக இந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு இ-ஆட்டோ ஓட்டுதல் மற்றும் பாதுகாப்புப் பயிற்சிகளுடன், வாடிக்கையாளர் சேவை, மென்திறன் பயிற்சிகள் (Soft Skills) மற்றும் அடிப்படைச் சுற்றுலா அறிவு உள்ளிட்டவை கற்றுக்கொடுக்க ப்பட்டுள்ளன. இதன் மூலம் பயிற்சி பெற்ற பெண்கள், மதுரை மக்களுக்கும், குறிப்பாக முதியவர்கள், பெண்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையைத் தொடங்கியுள்ளனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுற்றுலாத்துறை தென்மண்டல இயக்குநர் வெங்கடேசன் பேசுகையில், "மதுரையில் இன்று 13 பெண்கள் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி பெற்று இத்திட்டத்தில் இணைந்துள்ளதற்கு வாழ்த்துகள். மதுரை மாநகரம் தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறைக்கு ஒரு மையப்புள்ளியாகவும் (Hub), பண்பாடு மற்றும் கலாச்சாரம் மிகுந்த நகராகவும் விளங்குகிறது. தற்போது தமிழ்நாட்டில் பிங்க் ஆட்டோ மற்றும் இ-ஆட்டோக்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் சுற்றுலாத் துறையினூடாகப் பெண்களுக்கு அதிக வருமானம் கிடைக்க நல்வாய்ப்புகள் பெருகியுள்ளன" என்றார்.
இந்நிகழ்வில் மதுரை போக்குவரத்துத் துறை துணை காவல் ஆணையர் வனிதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா தேவி, மதுரை பாண்டியன் ஹோட்டல்ஸ் மேலாண் இயக்குநர் டாக்டர் ஸ்ரீ. வாசுதேவன், நிர்வாக இயக்குநர் பாண்டியன், இயக்குநர் மைதிலி பாண்டியன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.