மதுரை தொழிலதிபர் கொலை: பங்குதாரர் உள்பட 7 பேர் கைது

மதுரை தொழிலதிபர் கொலை: பங்குதாரர் உள்பட 7 பேர் கைது

மதுரை, செப். 16–


மதுரை தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை ஏவி கொலை செய்த பங்குதாரர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.


மதுரை பார்க் டவுன் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). தொழிலதிபரான இவர், முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டு, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, துணை கமிஷனர் இனிகோ திவ்யன் தலைமையில், உதவி கமிஷனர் பொன் ரகு, இன்ஸ்பெக்டர் ராஜாமணி அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில், கொலை சம்பவத்தில் பங்குதாரரான கல்லாணை (51) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தநிலையில், நேற்று அவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, கூலிப்படையை ஏவி ராஜ்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து கல்லாணை, கொலை சம்பவத்தை அரங்கேற்றிய மதுரையை சேர்ந்த விக்னேஷ்வரன் (45), சிவலிங்கம் (43), லாரன்ஸ் (43), ரவிமாறன் (55), ஜெயராஜ் (42), முரளி (44) உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


முன்விரோதம்


இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலையான ராஜ்குமாருக்கும், சந்தைப்பேட்டையைச் சேர்ந்த கல்லாணை என்பவரும் சேர்ந்து முனிச்சாலையில் பார்சல் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். இதில், இவர்கள் இருவருக்கும் இடையே லாப தொகையை பகிர்ந்து கொள்வதில் ஏற்கனவே பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. மேலும், கல்லாணையின் மகனை, பங்குதாரராக சேர்க்க வேண்டும் என ராஜ்குமாரிடம் வலியுறுத்தி உள்ளார். இதிலும் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, ராஜ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மற்றொரு வாகனத்தை அவர் மீது மோத வைத்துள்ளனர். இதில் அவர் லேசான காயங்களுடன் தப்பித்துள்ளார். இருப்பினும் அவரை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் என நினைத்து திட்டம் போட்டுள்ளனர்.


இந்தநிலையில், கல்லாணை வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதற்கு குறிப்பிட்ட பணத்தையும் தருவதாக பேரம் பேசி பணத்தையும் கொடுத்து அவர்களை கூலிப்படையாக மாற்றி உள்ளார். அதன்படி, சம்பவத்தன்று ராஜ்குமாரை கண்காணித்து, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%