இந்தக் கேலிக்கூத்தை பாருங்கப்பா.!"வாத்தியார் ராமநாதன் தனது சூப்பர் எக்ஸ்எல் வண்டியின் பின்னால் ஒரு பலகையை பிணைத்து..அதில் ஒரு கோணிச்சாக்கு நிறைய மண்பாண்டங்களாக பொதிந்துக்கட்டி ... நத்தை வேகத்தில் இயக்கிக்கொண்டு போவதைப் பார்த்து ...அவரது சகாக்களும்.. ஊர்க்காரர்களும் மர்மமாக சிரித்தனர். அதை லட்சியம் செய்யாமல் புன்முறுவலோடு கடந்து சென்றார் வாத்தியார். அவரது ஒவ்வொரு செயலும் இப்படித்தான் ஊர்காரர்களால் தூற்றப்படுவதும்.. முடிவில் இவரது பக்கமே அனுகூலம் என்றதும்..'ஆயிரம் இருந்தாலும் படிச்சவன் நாலையும் யோசித்து செய்யுறானப்பா.. அதான் கெலிக்கிறான்'என ஜகா வாங்குவதுமே ஊரார் வழக்கம். "இந்த வாத்திக்கு ஏண்டா..வேண்டாத வேலை..ஒத்த புள்ள அவனும் அரசாங்க உத்தியோகஸ்தன்... அழகு..அந்தஸ்து குறைவில்லாத புது மருமகளும் வந்தாச்சு...வீடு கொள்ளாத சீர் சாமான் வந்து இறங்கியிருக்கு.. இன்னும் கேட்டாலும் வெள்ளியிலேயே தருவிக்கவும் திராணி இருக்கு..இந்த கோக்கு மாக்கு வாத்தி ஏன் மண்சட்டி..பானைகளை வாங்கிட்டு திரியனும்..ஒருவேளை மூளை பிழண்டு போச்சோ.?" டீக்கடையில் புரளி புரண்டெழுந்த அதே நேரம்....தனது சம்பந்தியிடம் ராமநாதன் போனில் பேசிக்கொண்டிருந்தார். "இப்ப ..பாருங்க சம்பந்தி..மண்பாண்டங்களை கையாளுறதே ஒருவித மனப்பயிற்சி தான்..மண்பானையோ...சட்டியோ உடையுறதை நம்ம சமுதாயம் இன்னும் அபசகுனமா பார்க்குதே...அது பழமைவாதம்னாலும்..அதுவே ஜாக்கிரதை உணர்ச்சிய உண்டாக்கிடுது இல்லியா.?..மண்பாண்டங்களை புழங்க..புழங்க.. நிதானம் பிடிபடும்...எல்லா வேலைகளையும் எச்சரிக்கை உணர்வோட செய்வாங்க..தனியா புத்திமதி சொல்லி..நாம அவங்களுக்கு விரோதி ஆகவும் தேவையில்ல.. ஆரோக்கியமான சுவையான சாப்பாடும் கிடைக்கும் இல்லியா சம்பந்தி.!?" எதிர்முனையும் சிரிப்பலையில் நிறைய..மகிழ்வோடு அமர்ந்தார் வாத்தியார் ராமநாதன்.*---------
அரும்பூர்.க.குமாரகுரு,
மயிலாடுதுறை*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?