ரகுவுக்கு அவன் தந்தையைப் பிடிக்கவே பிடிக்காது.
காரணம்..?
எதைக் கேட்டாலும்...
“வேண்டாம்"
"இல்லை"
"அடுத்த மாதம்…பார்க்கலாம்”
இப்படியாகத்தான் அப்பாவின் பதில்கள் நேரே கணக்குப் புத்தகத்திலிருந்து வரும்.
பள்ளிப் புத்தகம் வாங்குவதில் கூட,
“போன வருஷம் படிச்சு முடிச்சவங்க கிட்டே பழைய புத்தகத்தை அரை விலைக்கு வாங்கினா போதாதா?''
என்று சொல்லும் மனிதனை
எப்படி அப்பா என்று மனம் ஏற்றுக் கொள்ளும்?
அம்மா சொல்லுவாள்,
“டேய் ரகு... அவரு ரொம்பக் கஷ்டப்பட்டு மேலுக்கு வந்தவர்டா”
ரகு கேட்க மாட்டான்.
அவனுக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். "அப்பா பணத்தை நேசிப்பவர்,மகனை நேசிக்காதவர்''.
அப்பா இறந்த அன்று கூட
ரகுவின் கண்கள் உலர்ந்தே இருந்தன.
பல நாட்கள் கழித்து,
ஒரு நாள் அலுவலக விஷயமாய் ரகு வெளியில் செல்ல வேண்டியிருந்தது. கால் டாக்ஸியை நிறுத்தி அதில் ஏறினான்.
கால் டாக்ஸிக்குள் முன்புறக் கண்ணாடிக்குக் கீழே
ஒரு பழைய, கருப்பு-வெள்ளை புகைப்படம்.
ரகுவின் அப்பா.
குழப்பமானான். "அண்ணா… இந்த போட்டோ…?”தயங்கிய குரலில் கேட்டான்.
“என் தெய்வம் சார்” என்றான் டாக்ஸி டிரைவர்.
ரகுவின் நெஞ்சு அதிர்ந்தது.
அந்த டிரைவரே தொடர்ந்தான். "நான் வேலை இல்லாம பசியில் மயங்கி ரோட்டோரமாய்க் கிடந்தப்ப,
இவர்தான் சாப்பாடு வாங்கிக் குடுத்தார்.... அது மட்டுமல்ல அன்னிக்கே தன்னோட பணத்தை அட்வான்ஸாய்க் குடுத்து
இந்த கால் டாக்ஸி வாங்கிக் கொடுத்து, "நிதானமா... புத்திசாலித்தனமா... உழைச்சு பிழைச்சுக்கோ"ன்னு சொன்னார்"
ரகு புருவங்களை நெரித்தான்.
"இன்னிக்கு என் குடும்பம் சாப்பிடுறதுக்குக் காரணம்
அவர்தான்.”
டாக்ஸி ஓடிக் கொண்டே இருந்தது.
ரகுவின் மனம் மட்டும் நின்றது.
''மகனுக்கு பொம்மை வாங்காத கைகள், அந்நியனுக்கு வாழ்க்கையையே வாங்கிக் கொடுத்திருக்கிறது"
"வீட்டில் காசை எண்ணியவர்,
வெளியில் மனிதத்தை எண்ணியிருக்கார்"
டாக்ஸியிலிருந்து இறங்கும்போது
ரகு கண்கள் கசிந்தன. அப்பா செத்த போது வராத அழுகை, இப்போது பீறிக் கொண்டு வந்தது.
(முற்றும்)
முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?