என்னாங்க...! அங்க என்னா பண்ணிட்டு இருக்கீங்க? வாசல்ல யாரோ கூப்பிடற மாதிரி சத்தம் கேட்குது.... உங்களுக்கு கேட்கலையா! வாசலுக்கு போய் பாருங்க... என்று சமையல் கட்டிலிலிருந்து, தன் கணவருக்கு குரல் கொடுத்தாள் ரஞ்சிதம்.
அறைக்குள் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த சரவணன், மனைவி ரஞ்சிதத்தின் குரல் கேட்டு வாசலுக்கு சென்று பார்த்தார். வாசல் கேட் அருகே, இரண்டு வீடு தள்ளிக் குடியிருக்கும் ராகவன் நின்று கொண்டு இருந்தார்.
சரவணனை ப் பார்த்த ராகவன், காலிங் பெல் வேலை செய்யவில்லை போலிருக்கிறது என்றார்.
ஆமாம் சார்... மழையில் சுவிட்ச் பழுதாகி விட்டது.
புதிதாக வாங்கி மாட்டவேண்டும் என்று சொல்லியபடியே வாசல் கேட்டைத் திறந்து ராகவனை உள்ளே வாங்க என்று அழைத்தார்.
உள்ளே வந்த ராகவன், சற்று பதற்றத்துடன் எலெக்ட்ரீசியன் யாராவது இருந்தா சொல்லுங்க என்றார்.
ஏன் என்னாச்சு? என்று சரவணன் கேட்டதும், மோட்டார் ஓடுது.... ஆனா டேங்குல தண்ணீ ஏறவே மாட்டேங்குது...
அதுக்குதான் எலெக்ட்ரீசியன தேடுறன்....
மோட்டார் ஓடுது... ஆனா தண்ணீ வரலை.. அப்படின்னா மோட்டார்ல பிரச்சினை இல்லேன்னு தோணுது... தண்ணி மட்டம் கீழே இறங்கிடுச்சுன்னு தெரியுது.... போர்வெல்லை கீழே கொஞ்சம் இறக்கனும்.. வெயில் அதிகமா அடிக்கிறதால எல்லா இடத்திலும் தண்ணீர் மட்டம் கீழே இறங்கிகிட்டே போகுது... அது ஒரு காரணமா இருக்கலாம்.. எதுக்கும் எலெக்ட்ரீசியனை கூப்பிடறன்.. அவர் வந்து பார்த்தாதான் என்ன பிரச்சினைனு தெரியும்... என்று சொல்லியபடியே, சரவணன் ராகவனைப் பார்த்து கேட்டார்.
சார்... உங்க மொட்டை மாடியில விழற மழை தண்ணியை காலியா இருக்கிற அடுத்த பிளாட்லதான விட்டிருக்கீங்க...!
ஆமாம் சார்! மழை தண்ணிதானேன்னு காலியா இருக்கிற பக்கத்து பிளாட்ல அந்த தண்ணியை போய் விழற மாதிரி பைப் லைன் போட்டு வச்சிருக்கேன்...
சார்... ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நகராட்சி அதிகாரிங்க வீடு வீடா வந்து மழைநீர் சேகரிப்பு செய்யனும்னு சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அதை நீங்க அப்ப செஞ்சிருந்தா இன்னைக்கு உங்க வீட்டுல தண்ணி பிரச்சினை வந்திருக்காது...!
நீங்க அதை செய்யாம அலட்சியமா அடுத்த பிளாட்ல கொண்டு போய் மழை தண்ணியை விட்டதினால, தண்ணி உங்களுக்கு கிடைக்காம போயிடுச்சு!
பானையில இருந்தாதானே அகப்பையில வரும்னு பழமொழி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்...
பானைன்னு சொல்றது நாம வாழற பூமி!
இயற்கை , மழையா கொடுக்கறது தான் இந்த பூமிங்கிற பானையில சேமிக்கப்பட்டு நமக்கு தண்ணியா, உயிர்நீரா கிடைக்குது !
அதுக்குதான் மழைநீரை சேமிக்கனும்னு அரசாங்கம் சொல்லிகிட்டே இருக்கு! நாமதான் அரசாங்கம் சொல்றது எதையுமே கேட்கிறதுல்லேயே!
உதாரணத்திற்கு நீங்களே உங்க வீட்டு மொட்டை மாடியில விழற மழைநீரை உங்களுக்கு வேணாம்னுதானே பக்கத்து பிளாட்டில கொண்டு போய் விட்டிருக்கீங்க..!. அப்புறம் எப்படி உங்க இடத்துல தண்ணி கிடைக்கும்...
இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்... நான் ஒன்னும் தப்பா சொல்லலில்ல... சார்..!
நீங்க ஒன்னும் தப்பா சொல்லலை...! எனக்கு இப்ப நல்லாவே புரியுது... என் தவறை நான் உணர்ந்துட்டேன்... இப்பவே பிளம்பரை கொண்டு வந்து பக்கத்து மனைகட்டுல விழற என் வீட்டு மழைநீரை என்னோட போர்வெல் இருக்குற இடத்துல விழற மாதிரி பைப்லைனை திருப்பி வைக்கப் போறன்... என்று சொல்லியபடியே
ராகவன் தன் வீட்டை நோக்கி வேகமாக புறப்பட்டு சென்றார்..
+++++++++++++++++
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.