மழை, வெள்ளத்தால் பாதித்த இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
புதுடெல்லி: மேக வெடிப்பு, மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்தை இன்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்துக்கு ரூ.1,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வான் வழியாக ஆய்வு செய்தார். அதன்பிறகு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகள், சேத மதிப்பீடு ஆகியவை தொடர்பாக காங்க்ரா பகுதியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது, முதற்கட்டமாக இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மேலும் உதவி வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் ரூ.2000 நிதி உதவி, விவசாயிகளுக்கு முன்கூட்டியே விடுவிக்கப்படும் என தெரிவித்த பிரதமர் மோடி, வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றார். பிரதமரின் தேசிய நிவாரண நிதி உதவியின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் சரி செய்து தரப்படும் என்றும், கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கான மினி கிட் வழங்கப்படும் என்றும் கூறினார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தனரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் ஆழ்ந்த இரங்கலும் அவர் தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து பணியாற்றும் என்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், மாநில நிர்வாகம் உள்ளிட்டோரைச் சந்தித்த பிரதமர் மோடி, மீட்பு மற்றும் நிவாரணங்களை அளிப்பதில் அவர்கள் அளித்த பங்களிப்புக்காக பாராட்டு தெரிவித்தார்.
 
                     
                                 
    
 
                                                             
                                                             
                                                             
             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 