=================
மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம் என்று குழந்தைப் பாடலில் துவங்கி மாதமோ மார்கழி, மங்கையோ மாங்கனி, கனிகளிலே அவள் மாங்கனி, காற்றினிலே அவள் தென்றல் என்று காதல் பாடல் வரை சிறப்பிக்கப்படும் பேறு பெற்றது மாங்கனி. மா, பலா, வாழை என்று முக்கனிகளில் முதன்மைப் படுத்தப்படும் தகுதி பெற்றதும் மாங்கனியே. மாங்கனிகள் அனைத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கும் ஒரு குறிப்பிட்ட மாங்கனியைப் பற்றி இந்தக் கட்டுரையில் பேசுவோம். அதற்கு முன் :
நமது இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே சுமார் 6000 வகை மாவினங்கள் செழித்து வளர்வதாக தாவரவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மலையாள மண்ணில் வெள்ளையானி, கோட்டுக்கோணம், செங்கை வருக்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளில் குண்டு, மல்கோவா, ராஜபாளையத்தில் சப்பட்டை, பஞ்சவர்ணம், கொங்கு நாட்டில் செந்தூரம், கிளிமூக்கு, ஆந்திராவில் பங்கனப்பள்ளி, உ. பி. யில் தசேரி, ம. பி. யில் பைரி, குஜராத்தில் பல்ஸாட், பீகாரில் லங்கடா, கொங்கணத்தின் ரத்னகிரி பகுதியில் ஆப்பூஸ் ( மராத்தியில் அல்போன்ஸா) என்பவை அந்தந்த பகுதிகளில் பிரபலமான மாங்கனி வகைகளாகும். மோர்க்குழம்புக்குத் தோதாக சின்னகுண்டு, பச்சையாகவே உண்ணத் தகுந்த வெள்ளரி மாங்கனி வகையும் பரவலாக அரியப்படும் மா வகைகளாகும். இதுதவிர குதாதத், இமாம்பஸந்த், ருமானி, நீலம், கல்நீலம், புளிச்சி, கொட்டைக்காய்ச்சி, நார்காய்ச்சி என பல்வேறு மாங்கனி வகைகளும் உள்ளன. இதில் மேல்நாடுகளில் மேன்மையாக மதிக்கப்பட்டு அதிக அளவில் ஏற்றுமதியாவது ஆப்பூஸ் எனப்படும் அல்போன்ஸா ஆகும். டஜன் ரூபாய் 5000 க்கும் மேல் விலையுள்ளது இது.
இதைவிட விலை மதிப்புள்ள ஒருவகை மாம்பழம் நம்மை அதிசயிக்க வைக்கிறது. அதுதான் மியாஸாக்கி மாங்கனி.
இது ஜப்பானிலுள்ள மியாஸாக்கி என்ற பகுதியை தாய் நிலமாகக் கொண்டது. மாணிக்கக்கல் (Ruby) போன்று அடர் சிவப்பு நிறத்தில் மின்னுவது மியாஸாக்கி. இதன் வண்ணத்தையும், வடிவத்தையும் கருத்தில் கொண்டு இது ஜப்பானிய மொழியில் டையோ - நோ - தமகோ என்று அழைக்கப்படுகிறது. அதாவது சூரிய முட்டை (Egg of Sun) என்று அதற்கு அர்த்தம். இந்த மா வகையின் ஒரு பழம் சராசரியாக 350 கிராம் எடை இருக்கும். இந்த மாங்கனியின் விலை சர்வதேச சந்தையில் கிலோவுக்கு ரூபாய் 2.7 லட்சம் முதல் 3.0 லட்சமாகும். மியாஸாக்கி மாம்பழத்தில் ஆன்டி ஆக்ஸைடுகள், பீட்டா கரோட்டின், போலிக் ஆசிட் போன்ற தாதுக்களும், கனிமங்களும் செறிந்துள்ளன. சுவையோ மிக அபாரம்.
பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விளையும் மஞ்சள் வண்ண மா வகைகளை பெலிக்கன் மா இனம் என்று வகைப்படுத்துவர். ஜப்பான் தென்கிழக்கு ஆசியப் பகுதிதான், ஆயினும் இது பெலிக்கன் மா இனத்தினின்று வேறுபட்ட இர்வின் மா இனமாக வகைப் படுத்தப்படுகிறது. இர்வின் மா இனம் என்பது அமெரிக்காவின் ப்ளோரிடா பகுதியில் விளையும் செவ்வண்ணம் கொண்ட, ஆப்பிளின் இனிப்புச் சுவையுடைய மா இனம். இது ஆப்பிள் மாம்பழம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஒருமுறை ம. பி. யின் ஜப்பல்பூரைச் சேர்ந்த சங்கல்ப் சிங் பரிஹார் என்பவர் அவரது துணைவியார் ராணி பரிஹாருடன் ரயிலில் பயணம் செய்யும் போது, அவருக்கு சகபயணி ஒருவர் இரண்டு மாங்கன்றுகளைக் கொடுத்தார். அதைத் தன் வீட்டில் நட்டு, பராமரித்தார் பரிஹார் சிங். இரண்டும் செழித்து வளர்ந்தன. அதன் கனிகளோ முற்றிலும் வித்தியாசமான பொன்னிறத்தில் மின்னின. அதற்குப் பிறகு தான் அவருக்கு தெரிந்தது அது விலை மதிப்பு மிக்க ஜப்பானிய மாங்கனி மியாஸாக்கி என்று. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். ஆனால் தெய்வம் பூமியைப் பிளந்து கொண்டும் கொடுக்கும் போல் தெரிகிறது!!. அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. பெரும் செல்வந்தர் ஆனார்.
அவர் தன் தாயின் நினைவாக அந்தப் பழங்களுக்கு அன்னையின் பெயரையே டாமினி மாம்பழம் என்று பெயர் சூட்டினார். அந்த இரண்டு மாமரங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நான்கு பாதுகாப்பு வீரர்களையும், ஆறு வேட்டை நாய்களையும் பணியமர்த்திக் கொண்டார் என்பது சுவையான செய்தி.
இன்று மியாஸாக்கி கன்றுகள் தைவான், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவின் பல பகுதிகளிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. பழங்கள் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
மதுரச் சுவையுள்ள எதுவுமே பெரு மதிப்புக்கு உரியவைதான் - நமது தமிழைப் போல!!
P. கணபதி
பாளையங்கோட்டை