மாதவரம் மண்டலத்தில் ரூ.1.49 கோடி மதிப்பிலான புதிய விளையாட்டு மைதானம்- மேயர் பிரியா திறந்து வைத்தார்

மாதவரம் மண்டலத்தில் ரூ.1.49 கோடி மதிப்பிலான புதிய விளையாட்டு மைதானம்- மேயர் பிரியா திறந்து வைத்தார்


 

 மேயர் பிரியா, மாதவரம் மண்டலம், வார்டு-28க்குட்பட்ட கொல்கத்தா ஷாப் தெருவில் மூலதன நிதியின் கீழ், ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, கால்பந்து வீரர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.


35,241 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு மைதானத்தில் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கபடி மற்றும் குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், கண்காணிப்பு கேமரா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முத்துமாரியம்மன் கோவில் தெரு, உடையார் தோட்டம், பாண்டியன் தெரு, திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளைச் சார்ந்த மக்கள் பயனடைவார்கள்.


இதனைத் தொடர்ந்து மேயர் , எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ரெட்டேரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர், மதகு பராமரிப்புப் பணி, ஏரியிலிருந்து வெளியேறும் நீர் தடையின்றி செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகள் குறித்துப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளில் கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


பின்னர், வார்டு-23க்குட்பட்ட மாதவரம் ரெட்ஹில்ஸ் பிரதான சாலையில் புழல் உபரிநீர் செல்லும் கால்வாயில் இணைக்கப்பட்டுள்ள வி.எஸ். மணி நகரிலிருந்து எம்.ஆர்.எச். சாலை வரை புதிதாக கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்புகளையும், மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, வடகிழக்குப் பருவழையை ஏதிர்கொள்வதற்கு அனைத்து நிலையிலும் தயார்நிலையில் இருந்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தொடர்ச்சியாக, மணலி மண்டலம், வார்டு-20க்குட்பட்ட மணலி ஏரியில் அம்ரூத் 2.0 திட்ட நிதியில் ரூ.4.73 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில் நுட்ப முறையில் கரைகளைப் பலப்படுத்துதல், தடுப்புச் சுவர் கட்டுதல், ஏரி வரத்துக் கால்வாய், ஏரி வடிகால் ஆகிய புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற பின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைத்தல், குழந்தைகள் விளையாட்டுத் திடல் ஏற்படுத்துதல், பூங்கா ஏற்படுத்துதல், ஏரியில் படகு சவாரி ஏற்படுத்துதல், பசுமை வெளி அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தி மணலி ஏரியினை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வுகளின்போது, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.நந்தகோபால், மாமன்ற உறுப்பினர்கள் கனிமொழி சுரேஷ், அ.சந்திரன், ப.ராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%