முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி முதல் வெற்றி
ஹராரே, ஜூலை.17-
ஜிம்பாப்வேயில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது லீக்கில் தென்ஆப்பிரிக்க அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது.
‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் வான்டெர் டஸன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறியது. டிவான் கான்வே (9 ரன்), டேரில் மிட்செல் (5 ரன்), டிம் செய்பெர்ட் (22 ரன்) உள்பட 5 வீரர்கள் 70 ரன்னுக்குள் பெவிலியன் திரும்பினர்.
இதைத் தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு டிம் ராபின்சனும், புதுமுக வீரர் பெவோன் ஜேக்கப்சும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய இவர்கள் சவாலான ஸ்கோருக்கு வித்திட்டனர்.
20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது. ராபின்சன் 75 ரன்களுடனும் (57 பந்து, 6 பவுண்டரி), பெவோன் ஜேக்கப்ஸ் 44 ரன்களுடனும் (30 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் ஜோடியாக 103 ரன்கள் திரட்டினர். 6-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்து ஜோடியின் 2-வது சிறந்த பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
பின்னர் 174 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு சீரானஇடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் 62 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதவித்த அந்த அணிக்கு டிவால்ட் பிரேவிஸ், ஜார்ஜ் லிண்ட் ஜோடி கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. பிரேவிஸ் தனது பங்குக்கு 35 ரன்களும் (ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), ஜார்ஜ் லிண்ட் 30 ரன்களும் எடுத்தனர். ஆனால் இவர்கள் வெளியேறியதும் நம்பிக்கை தகர்ந்தது. அந்த அணி 18.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, ஜேக்கப் டப்பி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 2-வது லீக்கில் ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு இது முதலாவது தோல்வியாகும். நியூசிலாந்து வீரர் டிம் ராபின்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை நடக்கும் 3-வது லீக்கில் ஜிம்பாப்வே- நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.