முனிவரின் அகந்தை

முனிவரின் அகந்தை


அந்த முனிவர் காட்டில் ஒரு மரத்தினடியில் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டிருந்தார். அவர் பெயர் கொங்கணவர்.


அது சமயம் அவர் அமர்ந்திருந்த மரத்தின் உச்சியில் இரு கொக்குகள் உட்கார்ந்திருந்தன.

அவைகள் இரண்டும் திடீரென ஒன்றுக்கொன்று கத்திக்கொண்டே சண்டையிடத் தொடங்கிவிட்டன. 


அவற்றின் இரைச்சல் முனைவருக்கு இடைஞ்சலாக இருந்தது. அவரால் மனமொன்றி தவம் செய்ய முடியவில்லை. நிமிர்ந்து பார்த்து அவற்றை அதட்டிப் பார்த்தார். அவை அடங்குவதாயில்லை.


பொறுமை இழந்த முனிவர் ஆத்திரம் மிகுதியால் அவற்றைப் பார்த்தார். அவரின் தவ வலிமையினால் அவர் கண்களிலிருந்து தீ ஜ்வாலை எழுந்து சென்று அவற்றைத் தாக்க, அவையிரண்டும் எரிந்து விழுந்து மாண்டன.


சிறிது நேரம் கழித்து அவர் யாசகம் பெற்று சாப்பிடுவதற்காக ஊருக்குள் வந்தார். முனிவர்கள் பெரும்பாலும் இது போல வீடுகளில் யாசகம் பெற்று உண்பர். சில நேரங்களில் காடுகளில் கிடைக்கும் பழங்கள் மற்றும் கிழங்குகளையும் சாப்பிடுவதுண்டு.


கொங்கணவ முனிவர் ஒரு வீட்டு முன்பு நின்று, "அம்மா, சாப்பாடு போடுங்க" என கேட்டார். அந்த வீட்டு பெண்மணி தன் கணவனுக்கு சேவை செய்வதையே தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து வரும் உத்தமி.


அப்போது அவர் தன் கணவனுக்கு சாப்பாடு போடுவதிலேயே கவனமாக இருந்தார். இருப்பினும் முனிவர் கூப்பிட்டது காதில் விழுந்தாலும் அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. கணவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அருகிலேயே இருப்பது அவரின் வழக்கம். உள்ளிருந்தவாறு, "முனிவரே, கொஞ்சம் காத்திருங்கள், வருகிறேன்" என்று கூறினார்.


முனிவருக்கு பசி மயக்கம். அத்துடன் அந்த பெண்மணியும் வெளியில் வந்து பதில் சொல்லாதது அவரை சீற்றம் கொள்ள வைத்தன. உடனே அந்த பெண்மணியை சபிப்பதற்கு எண்ணினார்.


அவருடைய இந்த எண்ணம் அந்த கற்புக்கரசியின் உள்ளத்தில் பிரதிபலித்தது. உடனே அவர் உள்ளிருந்தவாறு, "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணாவா" என்று கேட்க, முனிவர் அதிர்ச்சியடைந்தார்.


'எங்கோ தூரத்தில் உள்ள காட்டில் தான் கொக்குகளை எரித்தது இங்கிருக்கும் அந்த பெண்ணுக்கு எப்படி தெரியும். அது மட்டுமல்லாது வந்திருப்பது யாரென்று வாசலில் வந்து பார்க்காமல் உள்ளிருந்தபடியே எப்படி அறிந்து கொண்டாள்'


அப்போதுதான் அந்த பெண்மணி எவ்வளவு கற்புக்கரசியாக இருக்கவேண்டும் என நினைத்தவுடன் அவருடைய அகந்தை அழிந்தது. அந்த பெண்மணி வாசலுக்கு வரும் வரை திண்ணையில் அமர்ந்திருந்தார்.


கணவன் சாப்பிட்டு முடித்தவுடன், முனிவருக்காக இலையில் சாப்பாட்டுடன் வெளியில் வந்த அப்பெண்மணியின் காலில் விழப்போனவரை அவள் தடுத்து அவரை அமரச்செய்து சாப்பாடு பரிமாறினாள்.


முனைவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கையெடுத்து அவளை வணங்கியவாறு சாப்பிடத் தொடங்கினார் முனிவர்



டீ. என். பாலகிருஷ்ணன் 

5/501 சத்சங்கம் தெரு 

மடிப்பாக்கம் சென்னை 600091

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%