ரஷ்ய எண்ணெய் வாங்குபவர்களுக்கு வரி: ஜி7, நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை வரி விதித்தால் பதிலடி: சீனா எச்சரிக்கை

ரஷ்ய எண்ணெய் வாங்குபவர்களுக்கு வரி:  ஜி7, நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை  வரி விதித்தால் பதிலடி: சீனா எச்சரிக்கை

பீஜிங், செப்.16-


ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வ தற்காக அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் வரி விதித்தால் பதிலடி கொடுக்கப்படும் என ஜி7, நேட்டோ நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.


ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான சீனா, இந்தியா மீது அமெரிக்கா தொடர்ந்து பாய்ந்து வருகிறது. இதில் ஒருபடி மேலே சென்று இந்தியாவுக்கு 25 சதவீத அபராதம் விதித்து மொத்தம் 50 சதவீத இறக்குமதி வரியும் விதித்து உள்ளது.


அதேநேரம் ரஷிய எண்ணெய் வாங்கும் சீனா மீது வரி எதுவும் விதிக்காத அமெரிக்கா, ஜி7 மற்றும் நேட்டோ நாடுகளை தூண்டி விட்டுள்ளது.


அதாவது சீனா மீது 50 முதல் 100 சதவீத வரி விதித்து ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் மட்டுமே உக்ரைன் போரை நிறுத்த முடியும் என கடந்த வாரம் டிரம்ப் நேட்டோ நாடுகளை கேட்டுக்கொண்டார்.


இதைப்போல ஜி7 நிதி மந்திரிகள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க நிதி மந்திரி ஸ்காட் பெசன்ட், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளை அறிவுறுத்தினார்.


அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய வரி விதிப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது.


இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணிந்து தங்கள் மீது வரி விதிக்கக்கூடாது என நேட்டோ மற்றும் ஜி7 நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்து உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:-


ரஷியா உள்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளுடனான சீனாவின் இயல்பான பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு சட்டபூர்வமானது மற்றும் எதிர்ப்புக்கு அப்பாற்பட்டது.


இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கை ஒருதலைப்பட்ச மிரட்டல் மற்றும் பொருளாதார வற்புறுத்தலின் ஒரு பொதுவான செயலாகும். இது சர்வதேச வர்த்தக விதிகளுக்கு எதிரானது. மேலும் உலகளாவிய தொழில்துறை மற்றும் வினியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை அச்சுறுத்துகிறது,


இத்தகைய மிரட்டலும், அழுத்தமும் செல்வாக்கற்றது என்பதும், பிரச்சினையை தீர்க்காது என்பதும் நிரூபணமாகி இருக்கிறது.


உக்ரைன் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் உறுதியானது. பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு. பிரச்சினையின் முதல் நாளில் இருந்தே பாகுபாடற்ற நிலைப்பாட்டையும், அமைதி பேச்சுவார்த்தையை ஊக்கப்படுத்தியும் வருகிறது.


இந்த பிரச்சினையை சீனாவை நோக்கி திசை திருப்புவதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். அத்துடன் சட்ட விரோத ஒருதலைப்பட்சமான வரி விதிப்பையும், நீளும் அதிகார வரம்பையும் கடுமையாக எதிர்க்கிறோம்.


அந்தவகையில் சீனாவின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், அது உறுதியான பதில் நடவடிக்கைகளை எடுத்து அதன் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை உறுதியாகப் பாதுகாக்கும்.


இவ்வாறு லின் ஜியான் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%