ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள பகுதி ராமேஸ்வரம். அந்த நகரம் ஒரு அழகிய குட்டித் தீவு. பறவையின் பார்வையில் பார்த்தால் அத்தீவு சங்கு வடிவில் இருக்கும்.


இலங்கையில் சீதை சிறை பட்டிருந்தபோது அவரை மீட்பதற்காக ராமர் வானர சேனைகளுடன் கருங்கற்களைக் கொண்டு பாலம் அமைத்தது இங்குதான் என்பது நம்பிக்கை.


12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான ஸ்படிக லிங்க தரிசனமும் இந்தக் கோயிலில்தான் கிடைக்கிறது. அண்மையில் ராமேஸ்வரத்துக்கு குடும்பத்துடன் சுற்றுப் பயணம் சென்றிருந்தேன். சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5.50 மணி ரயிலில் சென்றோம். மாலை நேரம் என்பதால் பயணம் மிக ரம்மியமாக அமைந்தது. மறுநாள் காலை 4.30 மணி அளவில் ராமேஸ்வரம் சென்றடைந்தோம்.


நண்பர் ஒருவர் ஆலோசனை வழங்கியிருந்த காரணத்தால் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஆட்டோவைப் பிடித்து ரூம் ஒன்றை தேடினோம். மேற்கு கோபுர வாசலில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துக் கொண்டோம். காலை 5 மணியிலிருந்து 5.30 மணி வரைதான் ஸ்படிக லிங்க தரிசனம் என்பதால், விறுவிறுவென கோயிலுக்கு கிளம்பினோம்.

உடன் வந்தவர்களில் சிலர் வயதானவர்கள் என்பதால் மிகவும் பொறுமையாகவே நடந்துவந்தனர்.


கோயில் பிரகாரமும் மிகப் பெரியதாயிற்றே (இந்தியாவில் உள்ள ஹிந்து கோயில்களிலேயே மிகப் பெரிய பிரகாரத்தைக் கொண்டது ராமநாத சுவாமி கோயில்). ஒரு வழியாக ரூ.50 டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம் (ஸ்படிக லிங்க தரிசனத்துக்கு இந்தக் கட்டணம்). கோயிலில் வட இந்தியர்களை அதிகம் காண முடிந்தது. தேச ஒற்றுமையை வலியுறுத்தும் கோயிலாகவும் ராமநாத சுவாமி கோயில் விளங்கி வருகிறது.


தென் மாநிலங்களில் இருந்து காசிக்கு ஹிந்துகள் புனிதப் பயணம் மேற்கொள்வது போல், அவர்களும் இங்கே வருகின்றனர். முதலில் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்த கடலில் மண் எடுத்துக் கொண்டு அதை காசியில் பாய்ந்தோடும் புனித நீரான கங்கையில் கரைத்துவிட்டு அங்குள்ள விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும். அலாகாபாதில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இருந்து (கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கலக்கும் இடம்) தீர்த்தம் கொண்டு வந்து ராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.


இதனால், எப்போதும் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எந்தவொரு சுற்றுலா பகுதிக்கும் நாம் முடிந்த வரை வேலை நாட்களை தேர்வு செய்து செல்வது நல்லது. வார இறுதியில் சென்றால் கூட்டத்தில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும்.


நாங்கள் வேலை நாட்களில் சென்றதால் விரைந்து சென்று ஸ்படிக லிங்க தரிசனம் செய்தோம்.


ஸ்படிக லிங்கத்துக்கு பின்னால்தான் மூலவர் சன்னதி இருக்கிறது. ஆனால், திரையிட்டு மூலவரை மறைத்து விடுகிறார்கள். 6 மணிக்கு பிறகு மூலவரை மட்டுமே தரிசிக்க முடியும்.


பின்னர், அங்கிருந்து ரூமுக்குத் திரும்பி, உடைகளை எடுத்துக் கொண்டு அக்னி தீர்த்தத்துக்குச் சென்றோம். அதற்கு முன்பு சுடச்சுட தேனீரை அருந்தினோம். அக்னித் தீர்த்தத்தில் இறங்கியது குளிர் அதிகம் தெரிந்தது. காலை சூரிய உதயம் காணலாம் என்று காத்திருந்தோம். ஏனோ சூரிய உதயம் தாமதமானது. ஒரே நாளில் திரும்ப வேண்டும் என்பதால் நேராக கோயிலுக்கு வந்தோம்.

மேற்கு கோபுர வாசலில் இருந்து அக்னி தீர்த்தம் இருக்கும் பகுதி சற்று தூரமாகவே உள்ளது. கிழக்கு கோபுர வாசலில் அதிக ஹோட்டல்கள் உள்ளன. அதனால், அந்தப் பகுதியில் ரூம் எடுத்துக் கொண்டால் சற்று வசதியாக இருக்கும்.


அப்படியே ஈரத் துணியுடன் கோயிலில் இருக்கும் சிறப்புப் பெற்ற 22 தீர்த்தங்களில் நீராட சென்றோம். கிழக்கு கோபுர வாசலுக்கு அருகில் ரூ.25 கட்டணம் செலுத்தினால் நமக்கு ஒரு பட்டையை கையில் ஒட்டி விடுகிறார்கள். தனிவரிசையில் முன்னேறிச் சென்றால் ஒவ்வொரு கிணறில் இருந்தும் நம் தலையில் தீர்த்தம் தெளித்து விடுகிறார்கள். தனியாக ஏஜென்டுகளை நியமித்துக் கொண்டும் வரலாம். ஆனால், அதற்கு சற்று கட்டணம் அதிகம். அதே நேரம் கவனிப்பும் சிறப்பாக இருக்கும்.


ஒவ்வொரு கிணறில் இருக்கும் தீர்த்தமும் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அத்துடன், நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகவும் அந்தத் தீர்த்தங்கள் இருக்கின்றன.


அனைத்து தீர்த்தங்களும் சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. விலை ரூ.25. ஒரு சில தீர்த்தங்கள் அருகே அருகே உள்ளன. சில தீர்த்தங்களுக்குச் செல்வதற்கு நாம் கோயிலை பாதி வலம் வர வேண்டிருக்கும். இருப்பினும், களைப்பு பெரிதாக தெரியாது. ஒவ்வொரு தீர்த்தத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை உங்களை அழைத்துச் சென்று விடும்.


பின்னர் மீண்டும் அறைக்கு திரும்பி உடைகளை மாற்றிக் கொண்டு 3-ஆவது முறையாக திரும்பவும் கோயிலுக்குள் நுழைந்தோம். ஆம் .இப்போது தான் சுவாமியையும், அம்பாள் பர்வதவர்த்தினியையும் தரிசித்தோம். இங்கு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமர் வணங்கியதால் மூலவருக்கு ராமநாத சுவாமி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

சிறப்பான தரிசனத்துக்கு பிறகு கோயிலை சுற்று வலம் வந்தோம். பின்னர், வெளியே வந்து காலை உணவை எடுத்துக் கொண்டோம். மேற்கு கோபுர வாசலில் குறைந்த விலை முதல் அதிக விலையுடன் கூடிய உணவகங்கள் வரை உள்ளன.


பின்னர், அறைக்கு திரும்பினோம். காலையில் எங்களுடன் வந்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து ஊரை சுற்றிக் காட்ட கூறினோம். தனுஷ் கோடி வரை சென்று அங்கிருந்து வரும் வழியில் உள்ள கோதண்டராமர் கோயில், ஐந்து முக ஆஞ்சநேயர், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ராமர் பாதம் ஆகிய இடங்களை காண்பித்தார். முன்னாள் குடியரசுத் தலைவரும், தமிழகத்தின் பெருமையுமான அப்துல் கலாம் ஐயாவின் இல்லத்துக்கும் சென்றோம்.


அவரது இலத்தில் 2-ஆவது மற்றும் 3-ஆவது மாடி சென்று வர பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 2-ஆவது மாடியில் அவரது புகைப்படங்களும், அவர் புரிந்த சாதனைகளும் புகைப்படங்களாக இருக்கின்றன.


நவக்கிரக கோயில் அமைந்துள்ள தேவிப் பட்டினம், அப்துல் கலாம் நினைவகம் என்ற பல இடங்கள் உள்ளன. ஆனால், அங்கெல்லாம் இந்த முறை சென்று பார்க்க இயலவில்லை. அன்றைய தினம் இரவே ரயில் ஏற வேண்டும் என்பதால் அறைக்குத் திரும்பினோம்.


சென்னையிலிருந்து வந்தபோதும், அங்கிருந்து சென்னை திரும்பியபோதும் இரவாகவே அமைந்துவிட்டதால் பாம்பன் பாலத்தை வெளிச்சத்தில் பார்க்க முடியவில்லை. நிலா வெளிச்சத்தில் கண்டு ரசித்தோம். மீண்டும் ராமேஸ்வரத்துக்கு செல்ல இருக்கும் நாளை எண்ணி ஆவலுடன் காத்திருக்கிறேன்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%