ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி-–சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் உயர் மேம்பாலம் தமிழக அரசு ஒப்புதல்
சென்னை, ஜூலை.14-
பூந்தமல்லி- சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் உயர்மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பரந்தூரில் 4 ஆயிரத்து 971 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில், சென்னையின் 2-வது புதிய சர்வதேச விமானநிலையம் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல்கட்ட ஒப்புதலை அளித்துள்ளன.
அதேபோல், திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில் 24.8 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.427 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது.
பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பஸ் நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் 2-ம் கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை- கலங்கரை விளக்கம் இடையே 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டுக்கான துரித போக்குவரத்து அமைப்பை பரிந்துரை செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது, இந்த வழித்தடம் சுமார் 43.63 கிலோ மீட்டர் நீளத்திற்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் உயர் மேம்பாலம் அமைய உள்ளது. ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. விரைவில் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.