வணங்குகிறேன் அப்பா

வணங்குகிறேன் அப்பா



 வீட்டு வாசற் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ரகு. அவன் கையில் ஒரு சிறிய கால்குலேட்டர்.


 கூடத்தில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த அவன் தந்தை, மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்து, "ஏதுடா கால்குலேட்டர்... வாங்கினியா?"

தந்தையின் குரலில் சந்தேகம் இருந்தது.


“பஸ் ஸ்டாண்ட்ல... ஒரு பைக் சீட்டுல..

வெச்சிருந்தது... அக்கம்பக்கத்துல

யாருமே இல்லை… அதான்...எடுத்திட்டு வந்தேன்.”


தந்தையின் முகம் கடுமையாகியது.


“திருடிட்டு வந்திருக்கே... அப்படித்தானே?"


 "அய்யய்ய... கேட்பாரற்றுக் கிடந்தது எடுத்திட்டு வந்தேன்... அவ்வளவுதான்"


  "அதுவும் திருட்டுத்தான்...உடனே கொண்டு போய் எடுத்த இடத்திலேயே வெச்சிட்டு வா"


“என்னங்க அப்பா… ஒரு கால்குலெட்டர்தானே…”

 

"எதிர்ப் பேச்சு பேசாம... சொல்றதைச் செய்" தந்தை குரல் உயர்ந்தது.


ரகு உடனே வெளியேறினான்.


அடுத்த இருபதாவது நிமிடம்,

அதே பைக் சீட்டில் கால்குலெட்டரை

வைத்து விட்டுத் திரும்பினான்.


மறுநாள் காலை


தொலைக்காட்சியில் அந்தச் செய்தி ஓடியது.


“பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த

ஒரு பைக்கில் வைக்கப்பட்ட

கால்குலெட்டர் பாம் வெடித்து

ஒருவர் பலியானதாக தகவல்…”


ரகுவின் கைகள் நடுங்கின.

கால்கள் தளர்ந்தன.


 மெதுவாக தந்தையருகே வந்தான்.

அவர் எதிர்பாராத நேரத்தில் அவர் காலில் விழுந்தான்.


“அப்பா…”

கண்ணீர் விழுந்தது.


“நேத்து நீங்க திட்டலைன்னா இன்னைக்கு இந்த செய்தில

நம்ம எல்லோரோட பெயரும் வந்திருக்கும்…”


தந்தை மகனின் தலையைத் தொட்டார். ஒரு வார்த்தை சொன்னார்.


"நேர்மை எப்போதுமே நன்மையில்தான் முடியும்"


(முற்றும்)


முகில் தினகரன்,

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%