வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்த சென்னையில் 6 இடங்களில் முகாம் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது

வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்த சென்னையில் 6 இடங்களில் முகாம் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது


சென்னை, நவ. 9–


வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவதற்கும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கும் சென்னையில் இன்று 6 இடங்களில் முகாம் நடைபெற்றது.


சென்னையில் வீடுகளில் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் அதனை சரியாக பராமரிக்க முடியாத சூழலில் தெருக்களில் விட்டுவிடுகிறார்கள். வளர்ப்பு நாய்களை சாலைகளில் அழைத்துச் செல்லும்போது அவை ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.


வளர்ப்பு நாய்களுக்கு பலர் உரிய முறையில் தடுப்பூசிகளை போடாத காரணத்தால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.


இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.


செல்ல பிராணிகள் பதிவுக்கான நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதால், அவற்றை வளர்ப்போர், எளிதில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் 'மைக்ரோசிப்' பொருத்தி ஆவணங்கள் வழங்கவும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தவும் சென்னை மாநகராட்சி சார்பில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.


திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று தங்களது வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை அழைத்து வந்து மைக்ரோ சிப்களை பொருத்திச் சென்றனர்.


இன்றைய முகாமில் பங்கேற்ற மாநகராட்சி அதிகாரிகள் இணையதளத்தில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார்கள்.


செல்லப் பிராணிகள் வளா்ப்போர் தங்களின் விவரங்களை செயலியில் பதிவிட்டு செல்லப் பிராணிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களையும் பதிவிட்டு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஆய்வுக்கு பிறகு உரிமம் வழங்கப்படும்.


4-ந் தேதிக்குள் நாய்களை பதிவு செய்து மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல வருகிற 16–ந்தேதி மற்றும் 23–ந்தேதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%