வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன்? - அமித் ஷா விளக்கம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன்? - அமித் ஷா விளக்கம்!



 

பூஜ்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானது என்றும், இதை நாட்டு மக்கள் அனைவரும் முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.


எல்லை பாதுகாப்புப் படையின் 61வது நிறுவன தினத்தை முன்னிட்டு குஜராத்தின் பூஜ் நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆற்றிய உரை: நாட்டின் எல்லையை பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுவதைக் கண்டு நாட்டின் உள்துறை அமைச்சராக பெருமைப்படுகிறேன். 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படைக்கு வாழ்த்துகள். நாட்டின் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை இருக்கும் வரை, எதிரியால் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த 60 ஆண்டுகளில் எல்லைப் பாதுகாப்புப் படை அளித்துள்ளது.


முதல் பதிலளிப்பவர்களாக தங்கள் கடமைகளைச் செய்த எல்லைப் பாதுகாப்புப் படையினரின் துணிச்சலும் தியாகமும், நாட்டின் உள்துறை அமைச்சராக எனக்கு மிகுந்த பெருமையை அளித்துள்ளது. நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் மட்டுமல்ல, முழு தேசமும் உங்கள் துணிச்சலுக்கு வணக்கம் செலுத்துகிறது, உங்கள் திறமையை நம்புகிறது, 12 மாதங்கள் நிம்மதியாக தூங்குகிறது.


நாட்டுக்குள்ளும் வெளிநாட்டிலும் அனைத்து அவசரநிலைகளிலும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உறுதியாக நிற்கிறார்கள். இலக்கை அடையும வரை அவர்கள் ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதில்லை. எப்போதும் தங்கள் கடமையை முதன்மையாகக் கொண்டுள்ளனர். நிலம், வான் மற்றும் நீர் ஆகிய மூன்று எல்லைகளிலும் நாட்டின் பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே படை எல்லை பாதுகாப்புப் படை மட்டுமே.


இந்தியாவுக்குள் ஊடுருவலைத் தடுப்பது நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயக அமைப்பு மாசுபடுவதைத் தடுப்பதற்கும் அவசியம். எனவே, நமது நாட்டில் இருக்கும் அனைத்து ஊடுருவல்காரர்களையும் நாங்கள் அடையாளம் காண்போம், அவர்களை வெளியேற்றுவோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது எங்கள் உறுதிமொழி. தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது நாட்டையும் நமது ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறை.


ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில அரசியல் கட்சிகள் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கின்றன. வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்த எஸ்ஐஆர் அவசியம். எனவே, இந்த செயல்முறையை முழுமையாக ஆதரிக்குமாறு நாட்டு மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு பிஹார் தேர்தல் ஒரு எச்சரிக்கை என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அமித் ஷா பேசினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%