வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு
புதுடெல்லி, செப்.18-
பீகார் சட்டசபை தேர்தலில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் ஒட்டப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
இந்தியாவில் தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வேட்பாளர்களின் புகைப்படங்களை ஒட்டும் வழக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது.
ஒரே தொகுதியில் ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் பலர் போட்டியிடும்போது குழப்பத்தை தவிர்ப்பதற்காக இந்த புகைப்படம் ஒட்டும் பழக்கம் கொண்டு வரப்பட்டது.
எனினும் இந்த புகைப்படம் கறுப்பு- வெள்ளையில் மட்டுமே ஒட்டப்பட்டது. இதுவும் வாக்காளர்கள் அடையாளம் காண சிரமத்தை ஏற்படுத்தியது.
எனவே வாக்காளர்கள் எளிதாக வேட்பாளரை அடையாளம் காணும் வகையில், வேட்பாளர்களின் வண்ண புகைப்படத்தை ஒட்ட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
அதன்படி இனிவரும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டப்படும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
வேட்பாளரை எளிதில் அடையாளம் காண்பதற்காக அந்த புகைப்படத்தில் 4-ல் 3 பங்கு அளவுக்கு வேட்பாளரின் முகம் அச்சிடப்பட்டு இருக்கும்.
இதைப்போல வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவின் வரிசை எண்ணும் பெரிய அளவில் அச்சிடப்பட்டு இருக்கும் என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பீகார் சட்டசபை தேர்தல் முதல் இந்த நடைமுறை அமலாகிறது.
இதற்காக தேர்தல் நடத்தும் விதிகள், 1961-ன் கீழ் உள்ள வழிகாட்டுதல்களில் தேர்தல் கமிஷன் திருத்தம் செய்துள்ளது.
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான ஏற்பாடு களை தேர்தல் கமிஷன் தொடங்கி இருக்கிறது. இதற்காக அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்குச் சாவடி மட்டத்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அத்துடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள், துணை அதிகாரிகளுக்கு பயிற்சியும் அளிக்கப் பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
தலைநகரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்காக 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை தனது இணையதளத்தில் பதிவேற்றி இருக்கிறது.
வாக்காளர்கள் அனைவரும் இந்த பட்டியலை பரிசோதித்து தங்கள் பெயர் மற்றும் பெற்றோரின் பெயர் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு ஆதாரத்தை காட்டி தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.