விண்வெளி ஆதிக்கத்தில் சீனா முந்துகிறதா? உலகை ஆள சீனா போடும் புதிய ஸ்கெட்ச்!

விண்வெளி ஆதிக்கத்தில் சீனா முந்துகிறதா? உலகை ஆள சீனா போடும் புதிய ஸ்கெட்ச்!



இன்றைய விண்வெளி ஆதிக்கப் போட்டியில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் சீனா, அமெரிக்காவை முந்தி முதலிடத்தைப் பிடிக்க விழைகிறது!


இரண்டு பிரம்மாண்டமான சாட்டிலைட்டுகளின் தொகுதியை விண்ணிலே அமைத்து வணிகத்தில் முன்னணியில் வந்து உலகத்தின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முதல் சக்தியாக ஆக சீனா திட்டம் போடுகிறது!


இது மட்டுமல்ல, அமெரிக்க ராணுவத்திற்குப் போட்டியாக ராணுவத்திற்கான சாட்டிலைட்டுகளையும் விண்ணில் ஏவி ராணுவத்திலும் முதலிடத்தை அடையப் பார்க்கிறது சீனா.


இப்போது சீன ஒரு புது விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இதன்படி பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் பல வணிக மேம்பாட்டிற்கான விண்கலங்கள் செலுத்தப்படும்.


2025 ஜனவரியில் டீப் சீக் (DEEP SEEK) என்ற செயற்கை நுண்ணறிவினால் உலகையே பிரமிக்க வைத்தது சீனா.


‘சீனா டெய்லி’ என்ற சீனப் பத்திரிகை மிகுந்த கர்வத்துடன் இந்த டீப் சீக்கினால் அமெரிக்க கர்வத்தை ஒரேயடியாக நொறுக்கி விட்டோம் என்று பெருமை பேசிக் கட்டுரைகளை வெளியிட்டது.


ஒரு பேரிடர் நிகழும் போது இப்போது முதலில் உதவிக்கு வருவது சாட்டிலைட்தான்.


2025ல் ஜனவரி 7ம் தேதி திபெத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதன் மாக்னிட்யூட் அளவு 7.1.


400 பேர்கள் இறந்தனர். பூகம்பம் நிகழ்ந்த சில நொடிகளிலேயே சீன அரசு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. எட்டு சாட்டிலைட்டுகள் பூகம்பம் நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தன. உலகின் இதர பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் போடப்பட்டு தகவல் தொடர்பும் போக்குவரத்தும் சீரமைக்கப்பட்டன.


1970ல் தனது முதல் சாட்டிலைட்டை விண்ணில் ஏவியது சீனா. பிறகு 40 வருடங்களில் வருடத்திற்கு மூன்று என்ற எண்ணிக்கையில் 131 சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவியது. ஆனால் 2021ம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு சுமார் 100 சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவி சாதனை படைத்திருக்கிறது. ஆக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன சாட்டிலைட்டுகள் இப்போது விண்ணில் சுற்றுகின்றன!


விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டுகிறது சீனா. சந்திரனின் மறுபக்கத்திலிருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வந்த ஒரே நாடு சீனா தான். இப்போது சந்திரனைத் தவிர செவ்வாய் மீதும் தன் பார்வையைச் செலுத்தி இருக்கிறது சீனா.


ஏராளமான சீன கம்பெனிகள் சாட்டிலைட்டுகளைத் தயார் செய்வதில் தீவிரம் காட்டுகின்றன.


2030ல் சீனா சந்திரனுக்கு விண்வெளி வீரரை அனுப்பும் என்று 2023ம் ஆண்டு சீன அரசு அறிவித்தது. சோதனை ஓட்டங்கள் 2027ல் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பூமியில் உள்ள எல்லா இடங்களிலும் என்ன நடக்கிறது என்று வேவு பார்ப்பதில் சீனா இப்போது அமெரிக்காவிற்கு இணையாக முன்னணி வகிக்கிறது. இதற்கான சீன சாட்டிலைட்டுகள் ஏராளம் விண்ணில் செயல்படுகின்றன!


சாட்டிலைட் தொழில்நுட்பம் மட்டுமல்ல, எலக்ட்ரிக் கார்களைத் தயார் செய்வதிலும் சீனா தீவிரம் காட்டுகிறது. பசுமைப் புரட்சி, செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் போன்றவற்றிலும் தன் தீவிரத்தைக் காட்டுவதால் அமெரிக்கா இப்போது கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது.


பிற நாடுகளுடன் நல்லிணக்கமாக இருந்து அவர்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதும் சீனாவின் புது உத்தியாகும்.


சீனாவின் நல்ல மாற்றமானது அது எதிர்பார்க்கும் வெற்றிகளைத் தருமா? என காலம் தான் பதில் சொல்லும்!




நம் பேரண்டம் அதிவேகமாக விரிவடைந்து கொண்டே போவதாக அண்டவியலாளர்களில் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஆனால், அண்டம் விரிவடையும் வேகம், ஏற்கனவே குறைந்து கொண்டிருக்கலாம் என்கின்றனர் தென்கொரியாவின் யோன்சே பல்கலை ஆராய்ச்சியாளர்கள். நீண்ட காலமாக, அண்டம் விரிவடையும் வேகத்தை கணக்கிடும் அளவுகோலாக, '1-ஏ வகை சூப்பர்நோவா' எனப்படும் மீயொளிர் விண்மீன் வெடிப்பிலிருந்து பெறப்பட்ட தரவுகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். தென்கொரிய விஞ்ஞானிகள், அந்தத் தரவுகளை மீண்டும் பகுப்பாய்வு செய்து, அந்த அளவீடுகளில் பிழை உள்ளதாக வாதிடுகின்றனர் .


இந்த ஆய்வு முடிவு, தீராத, எப்போதும் விலக்கும் ஆற்றல் கொண்ட இருண்ட ஆற்றல் (Dark energy) பேரண்டத்தில் உள்ளது என்ற கருத்தை பலவீனப்படுத்துகிறது. மாறாக, இந்த புதிய ஆதாரம் இருண்ட ஆற்றலின் தாக்கம் காலப்போக்கில் பலவீனமடைந்து வருகிறது என்கிறது. இது உண்மையாக இருந்தால், அண்டத்தின் புரிதலுக்கு அடிப்படையாக இருக்கும் அண்டவியல் மாதிரி (cosmological model) திருத்தப்பட வேண்டியிருக்கும்.


 இந்த முடிவுகள் இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஒருமித்த கருத்துக்கு சவால் விடுகின்றன. மேலும், சில ஆய்வாளர்கள் தற்கா லிகமாக முன்வைத்த புள்ளியியல் திருத்தங்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு முடிவுகள் இருக்கின்றன. ஆயினும், இதன் தாக்கங்கள் ஆழமானவை.


பேரண்டம் விரிவடையும் வேகம் குறைகிறது என்றால், அது இறுதியில் சுருங்கவும் கூடும். இது 'பெருஞ்சுருக்கம்' (Big Crunch) போன்ற ஒரு நிகழ்வுக்கு வழி வகுக்கலாம். இது அண்டத்தின் கடந்த காலம் மற்றும் அதன் எதிர்காலம் பற்றிய நம் சொல்லாடல்களை தலைகீழாகத் திருப்பிப்போடும் ஒரு கண்டு பிடிப்பாகும்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%