விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
வண்டலூர்: விளையாட்டுத் துறையில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பில் சர்வதேச தரம் வாய்ந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று அதே வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் மேஜைப்பந்து விளையாட்டுக்கான முதன்மை நிலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நீச்சல் குளம் மற்றும் மேஜைப்பந்து முதன்மை நிலை மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு துணை முதல்வர் உதயநிதி தாம்பரம் மாநகராட்சி, மதுராந்தகம், செங்கல்பட்டு, மாமல்லபுரம் நகராட்சி, திருப்போரூர், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பேரூராட்சிகளின் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: சாதி, மதம், இனம், மொழி, ஈகோ ஆகியவற்றை எல்லாம் தாண்டி நம்மை இணைப்பது இந்த விளையாட்டு ஒன்றுதான். இதில் சாதித்தால் நமது மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதோடு, உங்களுக்கும் எதிர்கால வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும். ஏனெனில் நமது அரசு இந்தியாவிலேயே முதன் முறையாக மாநில அரசு வேலைகளில் 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குகிறது.
இதன் மூலம் கடந்த ஆண்டு 100 பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. இந்த ஆண்டும் 100 பேருக்கு கிடைக்க உள்ளது. உங்களுக்கு அனைத்து விதத்திலும் இந்த அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கை ஆட்சியர் சினேகா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.