விளையாட்டு போட்டியில் வென்ற 2,671 பேருக்கு பரிசு: கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்
Sep 26 2025
31

கடலூர், செப். 24–
கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற 2,671 பேருக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 26.08.2025 முதல் 09.09.2025 வரை பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ/மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் மற்றும் பொதுப்பிரிவினருக்கும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் கடலூர், அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் பங்கேற்க அனைத்துப் பிரிவுகளிலும் 30,050 நபர்கள் பதிவுசெய்திருந்தனர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ/மாணவிகள் 907 நபர்களும், கல்லுாரி மாணவ/மாணவிகள் 894 நபர்களும், மாற்றுத்திறனாளிகள் 210 நபர்களும், அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள் 438 நபர்களும், பொதுப் பிரிவில் 222 நபர்களும் என மொத்தம் 2,671 நபர்களுக்கு இன்றைய தினம் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு ரூ.3000 முதல் பரிசாகவும், ரூ.2000 இரண்டாம் பரிசாகவும், ரூ.1000 மூன்றாம் பரிசாகவும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றிபெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு 294 பள்ளி மாணவர்கள், 287 கல்லூரி மாணவர்கள், 63 மாற்றுத்திறனாளிகள், 12 அரசு பணியாளர்கள், 30 பொதுப்பிரிவினர், மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு 61 நபர்கள் என மொத்தம் 686 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?