விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டெடுப்பு
விழுப்புரம், ஜன.
விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு சிறுவாக்கூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:-
பழந்தமிழர்களின் தாய் தெய்வமாக விளங்கியவள் கொற்றவை தெய்வம். தொடக்கத்தில் காட்டில் உறைபவள் எனும் பொருளில் காடமர் செல்வி என வழங்கப்பட்டவள் பின்னர் போரில் வெற்றியை அளிக்கும் தெய்வமாக கொற்றவை என வணங்கப்பட்டாள். கொற்றவையின் உருவ அமைப்பு, வழிபாடு உள்ளிட்ட விவரங்களை சிலப்பதிகாரம் நமக்கு விளக்கமாக சொல்கிறது.
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கல்பட்டு சிறுவாக்கூர் கிராமத்தில் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது வயல்வெளிகளில் 2 சிற்றாலயத்தில் மூன்று கொற்றவை சிற்பங்கள் தனித்தனியே இருப்பதை கண்டறிந்தோம். இந்த சிற்பங்கள் சுமார் 5 அடி உயரமுள்ள பலகைக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. பல்லவர் கலைப்பாணியில் கொற்றவை அழகாகவும், கம்பீரமாகவும் காட்சித்தருகிறாள். காதணிகள், கழுத்தணி மற்றும் கை வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள் அழகாக காணப்படுகின்றன. இடையில் குறுவாள் ஒன்று காட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
இந்த சிற்பங்கள் 1,200 ஆண்டுகளை கடந்தும் இன்றும் வழிபாட்டில் இருந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், ஏமப்பேரூர், மொளசூர், சிங்கவரம், ஆசூர் உள்ளிட்ட இடங்களில் தலா 2 கொற்றவை சிற்பங்கள் அமைந்துள்ளன. ஒரே ஊரில் 3 கொற்றவை சிற்பங்கள் இருப்பது சிறுவாக்கூர் கிராமத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?