"ஜகதீஷ் டிஜிட்டல் ஸ்டுடியோ" நகரின் பிஸியான ஏரியாவில் அமைந்திருந்தது.
அதன் ஓனரான ஜகதீஷ் கையில் ஒரு போட்டோவை வைத்துக் கொண்டு அதையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்க,
"என்ன ஜக்கு... அது என்ன போட்டோ... இப்படிப் பார்த்திட்டிருக்கே?" அவன் மேஜைக்கு எதிரே அமர்ந்திருந்த நண்பன் சந்தோஷ் கேட்க,
அந்தப் போட்டோவை சந்தோஷிடம் தந்து, "ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு மேரேஜுக்கு போட்டோ எடுக்கப் போயிருந்தேன்... அந்த மேரேஜுக்கு வந்திருந்த ஒரு தம்பதிகள் இவர்கள்... இவர்களைப் பார்த்ததுமே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு... வலியச் சென்று ஒரு போட்டோ எடுத்துக்கறேன்னு கேட்டு எடுத்தேன்... அவங்களுக்கு ஒரு காப்பி அனுப்ப அட்ரஸும் வாங்கிட்டு வந்திட்டேன்"
"சரி இதை என்ன பண்ணப் போறே?"சந்தோஷ் கேட்டான்.
"ஆளுயரப் படமாக்கி... அதை அப்படியே ஒரு கட் அவுட்டாக்கி... என் ஸ்டுடியோ முன்னாடி வைக்கப் போறேன்... ஒரு விளம்பரத்திற்காக.."
அடுத்த நாள், அந்த முகவரிக்குச் சென்ற ஜகதீஷ் அந்த நபரிடம் அவர்களின் ஜோடிப் போட்டோவைத் தர எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டார் அவர்.
தொடர்ந்து கடை விளம்பரத்திற்காக அதைக் கட் அவுட்டாக்கி வைப்பது பற்றிப் பேச, அந்த நபர், "நோ...நோ... நாங்க என்ன மாடல்களா...எங்களை விளம்பரத்திற்குப் பயன்படுத்த..." கடுமையாகப் பேசித் துரத்தியடித்தார் ஜகதீஷை.
வெளியே வந்த ஜகதீஷ் சந்தோஷிற்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னான். "அவனுக்கு தன் பொண்டாட்டி ரொம்ப அழகாயிருக்கறதுல பயம்!... அந்த அழகை கட்அவுட்டா வெச்சா தெருவுல போறவன் வர்றவனெல்லாம் பார்த்து ரசிப்பானுகன்னு பயம்!... எவனாவது கொத்திட்டுப் போயிடுவானோ?ன்னு பயம்...அதான் வேண்டாங்கறான்"
வீட்டிற்குள்ளிருந்தபடி ஜகதீஷ் பேசியதைக் கேட்ட அந்த நபர் அவசரமாய் வெளியே வந்து, "போட்டோக்காரத் தம்பி... இந்த ரெண்டு மாச இடைவெளில என்ப நடந்தது?ன்னு தெரியாம வாய்க்கு வந்ததைப் பேசாதிங்க!"
"சார்... அது வந்து" ஜகதீஷ் திணற,
"டைவர்ஸ் ஆயிடுச்சப்பா... அந்த கல்யாணத்துக்கு வந்தப்பவே.. ஆளுக்கொரு பக்கம் இருந்து... தனித்தனியாத்தான் வந்தோம்... அப்பத் தீர்ப்பு வரலை... இப்ப வந்திடுச்சு" சொல்லி விட்டு அவர் படாரென்று கதவைச் சாத்தி விட்டுப் போக,
தொங்கிப் போன முகத்தோடு அங்கிருந்து கிளம்பினான் ஜகதீஷ்.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?