வேலூர் பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் ஏமாற்றிய இளம்பெண் கைது

வேலூர் பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் ஏமாற்றிய இளம்பெண் கைது



கைது செய்யப்பட்ட கிளாடிஸ் குணா வேலூரில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஐஏஎஸ் தேர்வுக்காகவும் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் வரை ஏமாற்றிய இளம்பெண்ணை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் குணாதேவி என்ற கிளாடிஸ் குணா (24). இவர், கடந்த 2018 முதல் 2021 வரை வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்தார். அதே துறையில் காட்பாடியைச் சேர்ந்த ரூபேஷ் சதீஷ்குமார் (42) என்பவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இருவருக்கும் இடையில் பழக்கம் இருந்துள்ளது.


கடந்த 2024-ம் ஆண்டு தனக்கு புற்று நோய் இருப்பதால் சிகிச்சைக்கு பணம் அளிக்கும்படியும், தனது கனவான ஐஏஎஸ் ஆக உதவி செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் ரூபேஷ் சதீஷ்குமாரிடம், குணாவதி கூறியுள்ளார். இதற்காக பல்வேறு கட்டங்களில் அவருக்கு ரூபேஷ் சதீஷ்குமார் பணம் அனுப்பியுள்ளார்.


மேலும், வாட்ஸ் - அப் குழு மூலம் நிதி திரட்டி சுமார் ரூ.54 லட்சம் தொகையை குணாவின் சிகிச்சைக்காக அவரது வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். மேலும், விளம்பரங்கள் மூலமாக அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி கிடைத்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி முதல், அதே ஆண்டு ஜூலை மாதம் வரை குணாவதியின் வங்கி கணக்குக்கு சுமார் ரூ.80 லட்சம் பண பரிமாற்றம் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ஐஏஎஸ் தேர்வில் தான் வெற்றி பெற்று உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் பயிற்சியில் இருப்பதாகவும் கூறி ரூபேஷ்குமாருக்கு அடையாள அட்டை மற்றும் புகைப்படங்களையும் குணா அனுப்பியுள்ளார்.


ஆனால், அந்த அடையாள அட்டை போலியானது என தெரியவந்துள்ளது. தொடர்ந்து படிப்பையும், உடல்நல குறைபாட்டை சுட்டிக்காட்டி தன்னிடம் இருந்து பணத்தை ஏமாற்றியதை ரூபேஷ் சதீஷ்குமார் தெரிந்துகொண்டார். இதுகுறித்து, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் ரூபேஷ் சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில், டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து குணாவை நேற்று கைது செய்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%