"ஒரு பாலம்... இரு மரணம்,"

"ஒரு பாலம்... இரு மரணம்,"


லோகோ பைலட் தற்கொலை,” என்ற அறிவிப்பு ரயில்வே அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தது.


இறந்தவர் பெயர் ரவிச்சந்திரன். 25 வருடமாய் ரயில்வே துறையில் பணி புரிந்தவர். ஒரு குறையும், ஒரு கறையும் படியாதவர். நேர்மையானவர் என்பதால் எப்போதும் எதற்கும் அஞ்ச மாட்டார்.


பாலத்தின் மேல் ரயில் செல்லும் போது மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.


“நிச்சயமாய் அவர் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்!.. தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழையல்ல அவர்” என்று ரவிச்சந்திரன் மனைவி அழுதபடி சொன்னாள்.


ஏனோ அதை யாருமே பதிவு செய்யவில்லை.


 சாட்சியாய் வந்தான் ஆடு மேய்க்கும் சிறுவனொருவன். பத்து வயதுதானிருக்கும்.


“நான் பார்த்தேன் சார்,” என்றான்.


"என்னடா நீ பார்த்தே?" இன்ஸ்பெக்டர் கேட்டார்.


“அங்கிள் குதிக்கல… யாரோ தள்ளி விட்டாங்க.” சொல்லும் போது சிறுவன் முகத்தில் பீதி.


இன்ஸ்பெக்டர் சிரித்தார்.

“ரயில் ஓடிக்கிட்டிருந்ததல்ல.... காற்று வேகமா அடிச்சிருக்கும்... அந்த வேகத்தைத் தாங்காம கீழே விழுந்திருப்பார்"


சிறுவன் இட, வலமாய்த் தலையசைத்தான்.

“இல்லை சார்.... அப்ப ரயில் நின்னுட்டிருந்தது.... கதவும் திறந்திருந்தது.”


CCTV காட்சிகள் வந்தன.


ரவிச்சந்திரன் காபினிலிருந்து வெளியே வருகிறார். அடுத்த நொடி "தொப்"பென்று கீழே விழுகிறார்.


 அதன் அடிப்படையில் அவசர அவசரமாய் "தற்கொலை,” என முடிவு செய்யப்பட்டு. உறுதிப்படுத்தப்பட்டது.


ஆனால், சிறுவன் ஏற்கவில்லை மீண்டும் மீண்டும் சொன்னான்.

“விழறதுக்கு முன்னாடி அவர் திரும்பிப் பார்த்தார் சார்...அப்ப அவர் முகத்துல நிறைய பயம் இருந்தது சார்... யாரோ பின்னாடியிருந்து விரட்டற மாதிரி ”


இன்ஸ்பெக்டர் கோபமடைந்தார்.

“டேய்... பொய் பேசறதை விட்டுட்டு.... ஒழுங்காப் போய் ஆடு மேய்க்கற வேலையைப் பாருடா.”


இரவு,


இன்ஸ்பெக்டர் தனியாக CCTV-யை மீண்டும் மீண்டும் பார்த்தார்.


அப்போதுதான் ஒன்றைக் கவனித்தார்.


ரவிச்சந்திரன் குதிப்பதற்கு முன்,

காபின் கண்ணாடியில் இன்னொரு நிழல் தெரிவதை. "யாரோ இருக்காங்க... அது யார்?..."


அடுத்த நாள் கோப்பு மீண்டும் திறக்கப்பட்டது.


ஆனால் அந்த சிறுவனைக் காணவில்லை.


அவன் தாய் சொன்னாள், "நேத்து ரயில்வே ஆபீஸ்ல இருந்து யாரோ வந்தாங்க... அவனைக் கொஞ்சம் விசாரிக்கணும்னு கூட்டிட்டுப் போனாங்க,"


மாலை செய்தி வந்தது.


சிறுவன் பாலத்தில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்ததாய்.


இரண்டு மரணங்கள். ஒரே பாலத்தில்.


கோப்பு மூடப்பட்டது.


இன்ஸ்பெக்டர் தன் டைரியில் ஒரு வரி எழுதினார், "அவன் பொய் சொல்லவில்லை....உண்மையைச் சொன்னான். அதனாலேயே, அவனும் தள்ளி விடப்பட்டான்”


(முற்றும்)



முகில் தினகரன்,

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%