‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ - கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு
கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார்
பெங்களூரு: மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்றார். மேலும், இது மாநிலத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்றும் கூறினார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவகுமார், “மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. இதற்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இதே விஷயம் தொடர்பாக நாளையும் ஒரு கூட்டம் உள்ளது. எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ மாநிலத் தலைவரும் தேசியத் தலைவரும் சந்திப்பது இயல்பானது. அதில் சிறப்பு எதுவும் இல்லை. கர்நாடகாவில் கட்சியைக் கட்டியெழுப்ப நான் தினமும் உழைத்து வருகிறேன். கர்நாடகாவில் 100 காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நான் அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்திக்கப் போகிறேன். காந்தி பாரதம் குறித்த புத்தகத்தை நான் எழுதியுள்ளேன், வெளியீட்டுத் தேதி குறித்த ஒப்புதல் பெறப்போகிறேன். காங்கிரஸின் நிறுவன தினத்தை நாங்கள் கொண்டாட வேண்டும்.
இதையெல்லாம் யார் செய்வார்கள்? நான்தான் செய்ய வேண்டும். நான் ஏன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? அதற்கான எந்த அவசியமும் இல்லை. கட்சி நான் தலைவராக தொடர வேண்டும் என்று விரும்பும் வரை, கட்சியின் விசுவாசமான சிப்பாயாக நான் இருப்பேன். கட்சிக்காக நான் தொடர்ந்து பாடுபட்டு அதை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவேன்" என்று கூறினார்.
மேகேதாட்டு விவகாரம்: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், கர்நாடகாவின் இந்த கோரிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க தடை கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நவம்பர் 13 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி, காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் செயலாகும். தற்போது காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயல்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்படுமானால், தமிழ்நாடு பெரிதும் பாதிக்கும்.” என வாதிட்டார்.
கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “மேகேதாட்டு அணை கட்டுவதால் தமிழ்நாடு எந்த வகையிலும் பாதிக்கப்படாது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதற்கு இத்திட்டம் தடையாக இருக்காது” என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திட்ட வரைவு அறிக்கை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) ஆகியவற்றின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. திட்ட வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்டால், தமிழ்நாடு உள்பட பாதிக்கப்பட்ட தரப்பினர் சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்நாடு அரசின் மனு முன்கூட்டிய நடவடிக்கை. எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது.” என தெரிவித்தனர்.