1,198 நாட்கள் போராடிய விவசாயிகளிடம் பணிந்த அரசு - கர்நாடகாவில் 1,777 ஏக்கர் நிலம் எடுப்பு கைவிடல்!

1,198 நாட்கள் போராடிய விவசாயிகளிடம் பணிந்த அரசு - கர்நாடகாவில் 1,777 ஏக்கர் நிலம் எடுப்பு கைவிடல்!

பெங்களூரு:

பெங்களூரு அருகே 1777 ஏக்கர் விவசாய நிலத்தை விண்வெளி பூங்காவுக்காக கையகப்படுத்தும் முடிவை கைவிடுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதனை எதிர்த்து 1198 நாட்கள் தொடர்ந்து போராடிய விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளியில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என அம்மாநில அரசு கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தது. இதற்காக தேவனஹள்ளியை சுற்றியுள்ள 13 கிராமங்களில் 1,777 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதாக அறிவித்தது. இதற்காக விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு, வேலை வாய்ப்பு, மாற்று நிலம் ஆகியவற்றை வழங்குவதாக தெரிவித்தது.


இதனை எதிர்த்து விவசாய சங்க கூட்டமைப்பினர் 1198 நாட்களாக உண்ணாவிரதம், சாலை மறியல், பேரணி என தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த 12-ம் தேதி பெங்களூருவில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


இந்நிலையில் முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று, விண்வெளி பூங்கா அமைப்பதற்காக 1777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிடுகிறது. அதற்கான அனைத்து செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். அதேவேளையில் சில விவசாயிகள் தங்களின் நிலத்தை தாமாக முன்வந்து வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அந்த நிலங்களை கையகப்படுத்தி, அதனை தொழில் வளர்ச்சிக்கு அரசு பயன்படுத்தும்.


விண்வெளி பூங்காவில் தங்கள் நிறுவனங்களை அமைக்க விரும்பிய பல தொழிலதிபர்கள் தற்போது அண்டை மாநிலங்களுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் விவசாயிகளின் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.


இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதியாக முதல்வருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில், “இது 1198 நாட்களாக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இதற்காக சில விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற போது


போலீஸாரின் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். சமரசமற்ற போராட்டத்தின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. எங்களின் கோரிக்கையை ஏற்றுகொண்ட கர்நாடக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%