14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பா.ஜ.க. தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம்
விசாகப்பட்டணம், செப்.15-
14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பா.ஜனதா உருவாகி இருப்பதாக அதன் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பெருமித்துடன் கூறியுள்ளார்.
மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் அதிகாரத்தில் உள்ளது.
தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பா.ஜ.க.வின் வளர்ச்சி, இன்று உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை எட்டியிருப்பதாக கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஆந்திராவின் விசாகப்பட்டணத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது இது குறித்து அவர் கூறியதாவது:-–
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பானதும், பதிலளிக்கக்கூடியது மாக இருக்கிறது.
நாங்கள் (பா.ஜ.க.) இன்று 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக மாறியிருக்கிறோம். அதில் 2 கோடி பேர் முழுநேர தொண்டர்கள் ஆவர்.
எங்களுக்கு 240 மக்களவை உறுப்பினர்கள், சுமார் 1,500 எம்.எல்.ஏ.க்கள், 170-க்கு மேற்பட்ட எம்.எல்.சி.க்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள்.
இந்தியாவில் 20 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், 13 மாநிலங்களில் பா.ஜ.க. அரசும் ஆட்சியில் உள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியில் செயல்திறன் அரசியல் மற்றும் பொறுப்புணர்வுள்ள அரசு இருக்கிறது.
அதேநேரம் முந்தைய அரசுகளில் செயல்படாத அரசியல் இருந்தது. அவர்கள் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை. அவர்கள் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளையும் மறந்து விட்டார்கள்.
அவர்கள் குடும்பம் சார்ந்த அரசியல், ஊழல் மற்றும் திருப்திபடுத்தும் அரசியலை செய்து வந்தனர்.
நாங்கள் ஒரு சித்தாந்தம் கொண்ட அரசியல் கட்சியில் இருந்து வந்திருக்கிறோம்.
கட்சி வாக்களித்ததுபோல அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது, குடியுரிமை சட்டம், வக்பு சட்டம் திருத்தப்பட்டது, முத்தலாக் தடை செய்யப்பட்டது. அந்தவகையில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
உலக அளவில் 4-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, 3-வது இடத்தை விரைவில் எட்டும்.
ஜி.எஸ்.டி.யை 2 அடுக்காக மாற்றி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பரிசு வழங்கி இருக்கிறார்.
நமது ராணுவ ஏற்றுமதி 7 மடங்கு அதிகரித்து இருக்கிறது. உலகின் மருந்தகமாக நாம் மாறியிருக்கிறோம். இந்தியா தற்போது 92 சதவீத செல்போன் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கிறது.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.