18 முதல் 65 வயது வரையுள்ள அனைவரும் ரத்ததானம் செய்யலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
சென்னை: 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் 3 மாதத்துக்கு ஒருமுறையும், பெண் 4 மாதத்துக்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்த தான நாள் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று, தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்கள், 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த தன்னார்வலர்கள், இணையதளத்தில் பதிவு செய்த தன்னார்வ ரத்தக் கொடையாளர் களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்வில், சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழும திட்ட இயக்குநர் ஆர்.சீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் ஏ.சோமசுந்தரம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆர்.சுகந்தி ராஜகுமாரி, சென்னை மாநகராட்சி நகர நல அலுவலர் ஜெகதீசன், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழக சுகாதாரத் துறை, பிற மாநிலங்களுக்கு ரத்த தானத்தில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இந்த ஆண்டின் தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தின் கருப்பொருள் “ரத்த தானம் செய்வோம், நம்பிக்கை கொடுப்போம், ஒன்றாக இணைந்து மனித உயிர்களைக் காப்போம்” என்பதாகும்.
டெல்லியில் உள்ள சுகாதார பொது இயக்குநரகத்தால் 2024-25-ம் ஆண்டில் 4.50 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்க அரசு ரத்தமையங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உரிமம் பெற்ற அரசு ரத்த மையங்களில், தன்னார்வ ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக, 4,354 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, 4.53 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டு, தமிழகம் 101 சதவீதத்தை அடைந்துள்ளது.
மருத்துவர்கள் கூற்றின்படி நம் ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானத்தின்போது 350 மி.லி.முதல் 450 மி.லி. ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் 3 மாதத்துக்கு ஒரு முறையும், பெண் 4 மாதத்துக்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம். e-RatKosh என்ற வலைதளத்தில் தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் ரத்தம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.