மெல்போர்ன், ஜன.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8- ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். ஆஸ்திரேலியா தனது தொடக்க ஆட்டத்தில் பிப்.11-ந்தேதி அயர்லாந்தை கொழும்பில் சந்திக்கிறது.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கேப்டனாக தொடருகிறார். காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். போட்டிக்குள் இவர்கள் உடல்தகுதியை எட்டாவிட்டால் நிச்சயம் மாற்றம் இருக்கும். வருகிற 31-ந்தேதி அவரை அணியில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்தியா, இலங்கை ஆடுகளங்கள் சுழலுக்கு கணிசமாக ஒத்துழைக்கக்கூடியவை என்பதால் அதை மனதில் கொண்டு மேத்யூ குனேமேன், ஆடம் ஜம்பா, சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்கள் கூப்பர் கனோலி, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் கனோலி, ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 12 இருபது ஓவர் போட்டிகளில் இடம் பெறவில்லை. ஆனாலும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அழைக்கப்பட்டுள்ளார். பிக்பாஷ் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் (5 ஆட்டத்தில் 2 அரைசதம் உள்பட 174 ரன் மற்றும் 6 விக்கெட் எடுத்துள்ளார்) அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பென் துவார்ஷூயஸ், மிட்செல் ஓவன் கழற்றி விடப்பட்டனர். பென்சர் ஜான்சன் காயத்தால் அவதிப்படுவதால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. முன்னணி இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியில் இந்த முறை இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட இடம் பெறவில்லை.
உலகக் கோப்ைப போட்டிக்கு தயாராவதற்காக இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதற்கான அணி பின்னர் அறிவிக்கப்படும்.
உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:-
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்லெட், கூப்பர் கனோலி, பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எலிஸ், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குனேமேன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.