200–க்கும் மேலான பழைய வீடுகள், ரெயில் நிலையம், சர்ச், மேம்பாலத்துக்கு கீழ் விடிய விடிய நடந்த பணிகள் பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரை ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணி நிறைவு
சென்னை, ஜூலை 23–
சென்னை தி.நகர் பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையான அதிநவீன ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணியின் ஒரு வழி சாலை பணி இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையிலான சுமார் 2.1 கி.மீ. தூரத்திற்கான சுரங்கப்பாதை பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது வழித்தடம் 4 களங்கரைவிளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை (Lighthouse - Poonamallee Bypass) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மஞ்சள் வழித்தடம் (Yellow Line) என்று அழைக்கப்படும் வழித்தடம் 4 ஆனது, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. தூரத்திற்கு அமைகிறது. இதில் 10.1 கி.மீ. சுரங்கப்பாதையாகவும், 16 கி.மீ. உயர்மட்ட பாதையாகவும் இருக்கும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 30 நிலையங்கள் உள்ளன, இதில் 12 சுரங்க நிலையங்கள் அமைய உள்ளது.
‘பிரம்மாண்ட பீகாக்'
சுரங்க எந்திரம்
பனகல் பார்க் - கோடம்பாக்கம் மெட்ரோ சுரங்கப் பாதையானது, வழித்தடம் 4-ன் முக்கியமான சுரங்கப்பாதைப் பிரிவுகளில் ஒன்றாகும். இந்தப் பாதையின் 2 வது சுரங்கம் என்று அழைக்கப்படும் இந்த பாதையின் பணிக்காக "பெலிகன்" (Pelican) மற்றும் "பீகாக்" (Peacock) என்ற சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஒருவழி சுரங்கப்பாதையை தோண்டும் பீகாக் எந்திரம் பனகல் பார்க்கில் தொடங்கி, கோடம்பாக்கத்தை வந்தடைந்தது.
அப்போது, முன்னால் இருந்த சிமெண்ட் தடுப்புகளுக்கு வெளியே தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொண்டு பிரம்மாண்ட பீகாக் எந்திரம் வெளியே வந்தபோது, உயர் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திட்டத்தின் முக்கிய பகுதியில் அமைக்கப்பட்ட மெட்ரோ சுரங்க ரெயில் திட்டத்தின் முதல் கட்ட வெற்றியை கொண்டாடும் விதமாக, கோடம்பாக்கத்தில் இன்று (புதன்) காலை விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் இந்த பணியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணி ஊழியர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்த விழாவில், சென்னை மெட்ரோ ரெயில் (CMRL) திட்டப் பணிகளின் இயக்குநர், சிஜிஎம் பிளானிங், சுரங்கப்பாதை பணிகளின் பொது மேலாளர், உயர் அதிகாரிகள், ஐடிடீ சிமெண்டேசன் நிர்வாக மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.