சென்னையில் நாய்களைக் கட்டுப்படுத்தி ‘ரேபிஸ்’ பாதிப்பைத் தவிர்க்க நடவடிக்கை : தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னையில் நாய்களைக் கட்டுப்படுத்தி ‘ரேபிஸ்’ பாதிப்பைத் தவிர்க்க நடவடிக்கை : தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை, ஆக 16–


நாய்களின் வெறிச்செயலால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தினைத் தடுக்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாய்களைக் கட்டுப்படுத்தி ரேபிஸ் பாதிப்பினை தவிர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–


சென்னை மாநகரத்திற்குட்பட்ட நாய்களை இணையதளம் வழியாக பதிவு செய்யும் ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இதன்படி, நாயின் புகைப்படம், நாய் உரிமையாளரின் புகைப்படம், தடுப்பூசி விவரங்கள் ஆகியவற்றை நாய் உரிமையாளர்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்தத் திட்டம் கட்டாயமாக்கப்படாததன் காரணமாக, பெரும்பாலானோர் இந்தத் திட்டத்தில் தங்கள் நாய்களை பதிவு செய்யவில்லை.


சென்னை மாநகரத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செல்ல நாய்கள் இருக்கின்ற நிலையில், 11,200 நாய்கள் குறித்த விவரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர தெரு நாய்களின் ஆதிக்கம் வேறு கொடிகட்டி பறக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் என்பது வெறும் பெயரளவில்தான் இருக்கிறது.


தி.மு.க. அரசின் செயலற்ற தன்மை காரணமாக தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பல தரப்பினர் புகார்கள் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத் தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதுவரை 20 பேர் பலி


இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்களை கட்டுப்படுத்துவது குறித்த விளக்கங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கால்நடை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.


நாய்களைக் கட்டுப்படுத்தக்கூட நீதிமன்றம் செல்லக்கூடிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கும் செயல். கடந்த ஏழு மாதங்களில் மட்டும் நாய்க் கடியினால் 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு மாநில அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்து போயுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.


இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%