திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர், ஆக. 14-–
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 25-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இத்திருவிழாவையொட்டி முதல் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. காலை 5.18 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.தங்க மயில் வாகனத்தில் வீதி உலா
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 18-ஆம் தேதி 5-ம் திருநாளன்று மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 7-ம் திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
8-ம் திருநாளான 21-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகின்ற 23-ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
வீதி உலா
இதையொட்டி நேற்று மாலை கொடிப்பட்ட வீதி உலா நடந்தது. அப்போது கொடிப்பட்டத்தை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையால் 1 மணி நேரத்திற்குப் பிறகு சிவன் கோயிலில் வைத்து கொடிப்பட்ட வீதி உலா தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்ட வீதி உலாவிற்காக வழக்கம் போல 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மண்டபத்தில் உள்ளே வைத்து கொடிப்பட்டத்தை வாங்குவதற்காக 3ம் படி செப்பு ஸ்தலத்தார் ஐயப்பன் அய்யர் மற்றும் ஸ்தலத்தார் மற்றும் கைங்கர்யா சபா நிர்வாகிகள் காத்திருந்தனர். அப்போது உறவின்முறை நிர்வாகிகள் கொடிப்பட்டத்தை மண்டபத்தின் வெளியே வைத்து தான் தருவோம் என கூறி புறப்பட்டனர். இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் உறவின்முறை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் கொடிப்பட்டத்தை பெற்றுக் கொண்டு சிவன் கோயிலில் வைத்து ஸ்தலத்தாரிடம் கொடுத்தார். அதன்பிறகு சிவன் கோயிலில்இருந்து கொடிபட்ட வீதி உலா தொடங்கியது.
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா இன்றுகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.