ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி சாதனை வெற்றி
Aug 11 2025
13

புலவாயோ, ஆக.10-
நியூசிலாந்து -ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 125 ரன்னில் அடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 130 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 601 ரன்கள் குவித்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன் (601/3) நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்தது.
இதைத்தொடர்ந்து 476 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணி 28.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக 3-வது வீரராக களம் கண்ட நிக் வெல்ச் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் (71 பந்து) சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் கிரேக் எர்வின் 17 ரன்கள் எடுத்தார். தடை காரணமாக மூன்றரை ஆண்டு இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய பிரன்டன் டெய்லர் (7 ரன்) உள்பட மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜக்காரி போக்ஸ் 5 விக்கெட்டும், மேட் ஹென்றி, ஜேக்கப் டப்பி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அறிமுக வீரரான ஜக்காரி போக்ஸ் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் சாய்த்து இருந்தார். அவர் இந்த டெஸ்டில் (இரு இன்னிங்சிலும் சேர்த்து) 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட் அள்ளினார்.
டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் மெகா வெற்றியாக இது அமைந்தது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு நேப்பியரில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 301 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே பெரிய வெற்றியாக இருந்தது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?