நிதி மோசடி வழக்குகளில் தமிழக அரசு - சிபிஐ இடையே ஒருங்கிணைப்பு இல்லை: ஐகோர்ட்

நிதி மோசடி வழக்குகளில் தமிழக அரசு - சிபிஐ இடையே ஒருங்கிணைப்பு இல்லை: ஐகோர்ட்

மதுரை:

நிதி மோசடி வழக்குகளில் மாநில அரசுக்கும், சிபிஐக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.


எஸ்பிஐ வங்கியில் ரூ.13.11 கோடி மற்றும் ரூ.3.84 கோடி கடன் முறைகேடு தொடர்பான புகாரை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் எஸ்பிஐ வங்கி சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அப்போது சிபிஐ தரப்பில், மாநிலத்துக்குள் சிபிஐ விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சட்டப்படி மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசு விசாரணைக்கு ஒப்புதல் தரவில்லை என்று கூறப்பட்டது.


தமிழக அரசு தரப்பில், “சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கலாம்” எனக் கூறப்பட்டது. அதற்கு சிபிஐ தரப்பில், “புகாரில் குறிப்பிட்டுள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தவே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதனால் மோசடியில் தொடர்புடைய பொது ஊழியர்கள், தனிநபர்களை சேர்க்க நினைத்தால், ஒப்புதல் பெறவில்லை என்று கூற வாய்ப்புள்ளது. இதனால் விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவின் விவரம்: தமிழக அரசு, சிபிஐ விசாரணைக்கான பொது ஒப்புதலை 2023-ல் திரும்ப பெற்றுக் கொண்டது. இதனால் சிபிஐ விசாரிக்க டெல்லி சிறப்பு காவல் சட்டப்படி மாநில அரசிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும். மாநில அரசின் ஒப்புதலில் பொது ஊழியர்கள், தனிநபர்கள் குறித்து எதுவும் கூறப்படாததால், ஒப்புதல் வழங்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் விசாரணை நடைபெறாமல் உள்ளது.


இந்த விஷயத்தில் மாநில அரசின் நடத்தையை நியாயப்படுத்த முடியாது. விசாரணை தொடங்குவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரைப் பற்றியும் சிபிஐ அறிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது. அதேநேரத்தில், ஒப்புதலில் அடையாளம் காணப்படாத தனிநபர்கள், பொது ஊழியர்கள் குறித்து சேர்க்கப்படாததை காரணம் காட்டி, சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பதும், விசாரணையை நிறுத்துவதும் நியாயமல்ல.


அரசு மற்றும் சிபிஐயின் அலட்சியம் மற்றும் ஒத்துழைப்பு இல்லாதது நீதியின் நோக்கத்தை தடம்புரளச் செய்துள்ளது. இதை நிர்வாக குறைபாடாக கருத முடியாது. பொறுப்புகளிலிருந்து தவறுவதாகும். சிபிஐ விசாரணை நடத்தி அனுமதி பெறுவதற்குப் பதிலாக, புகார்களை திரும்ப அனுப்புவது, கடிதங்களை எழுதுவது மற்றும் அமைதியாக இருப்பது என முடிவெடுத்தது சரியல்ல. இந்த நடத்தையை ஏற்க முடியாது. கடும் நிதிக் குற்றங்களில் செயல்படாமல் இருப்பது விசாரணை அமைப்பின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது.


நீதி தாமதத்துக்கு சிக்கலான நடைமுறைகள் மட்டும் காரணம் அல்ல. 2 துறைகளின் ஈகோ மற்றும் அரசியல் காரணங்களாலும் நீதி தாமதமாகிறது. இந்த செயல்பாட்டை நீதிமன்றம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. பொதுத்துறை வங்கியில் இருந்து புகார் வந்தவுடன் மாநில அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அந்த ஒப்புதல் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமானதாக இருந்தாலும், தாமதம் இல்லாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். நடைமுறை தாமதங்களை மறுபரிசீலனை செய்து இனிமேல் இதுபோல் நடைபெறாமல் இருக்க தலைமை செயலாளர், சிபிஐ இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த வழக்கை பொறுத்தவரை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையின்போது, அதே குற்றத்துடன் தொடர்புடைய பிற தனி நபர்களின் பங்கு - பொது ஊழியர்களாக இருந்தாலும் சரி அல்லது தனி நபர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது சிபிஐ சட்டப்படி சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கலாம்.


குற்றத்தில் தொடர்புடையவர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொது ஊழியர்களாக இருந்தால் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற வேண்டும். 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%