வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 19.08.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 19.08.25


  ஒரு குடும்பத்தில் ஒருவர் இருவர் தொண்டுள்ளத்துடன் இருப்பார்கள் ; பார்த்திருக்கிறோம். ஆனால் மனோகர் குடும்பத்தில் மனோகர், மனைவி கலா, மகள் அனிதா என்று மூவருமே தொண்டுள்ளத்துடன் இருப்பதும், அவர்கள் பரிசாக கிடைத்த பணத்தை வேலைக்காரி தங்கத்துக்கு தருவதும் மகிழ்ச்சியாக இருந்தது. வி.கே.லக்ஷ்மி நாராயணனின் 'தொண்டுள்ளம்' என்ற இந்த சிறுகதை மனத்திருப்தியை தரும் நல்ல சிறுகதையாக மிளிர்கிறது.


  'அரிசி சோறு' என்ற சிறுகதையை எழுதிய பெண் எழுத்தாளரின் பெயர் விடுப்பட்டு விட்டது. சிறுகதை சிறப்பாக இருந்தது. அந்தஸ்து காரணமாக சம்பத்தின் காதல் திருமணம் தடைப்பட்டாலும், எப்படியும் காதலி ஸ்ரீதேவியின் பிடிவாதத்தால் இந்த திருமணம் நிச்சயம் நடக்கும் என்று தோன்றுகிறது. எது எப்படியோ, சம்பத் முட்டாள்தனமாக ஸ்ரீதேவியின் அப்பா பொன்னம்பலத்தின் வயக்காட்டை கொளுத்தாமல் இருந்தது மிகப்பெரிய ஆறுதலாகும்!


  நிரஞ்சனாவின் 'யாதுமாகி' தொடர் அபியின் வீட்டில் குதூகலமாக தொடர்கிறது. யாழினியின் கையில் கிடைத்த அந்த போட்டோ ஆல்பத்தில் அப்படி என்ன போட்டோ இருக்கிறது என்பதை யாழினியை போலவே எனக்கும் அறிய ஆர்வமாக இருக்கிறது.


  உமா வெங்கடேசனின் 'ராமாயணத்தின் இறுதி பகுதி' என்ற கட்டுரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. ராமன் திருமாலின் வடிவம், சீதை லக்ஷ்மியின் வடிவம் என்றெல்லாம் தெரியும். இந்த அரிய காட்சியை இந்த கட்டுரை ஒரு இலக்கிய அழகுடன் கண்முன் கொண்டுவந்து அற்புதம் சாதித்திருக்கிறது.


  'ஜெய் ஹிந்த்' எனும் முழக்கத்தை முதலில் முழங்கிய செண்பகராமனின் வரலாறு, அவரது வாழ்க்கையை சிறப்பாக படம் பிடித்துக்காட்டியது. செண்பகராமன் என்ற அந்த பிரபலமான சுதந்திரப்போராட்ட வீரரை நன்கு புரிந்துக்கொள்ள இந்த கட்டுரை எல்லோருக்கும் நன்கு உதவும்.


  நகம் கடிப்பதை பற்றி முத்து ஆனந்த் கட்டுரையை படித்தேன். சிலர் எதையாவது சிந்தித்துக்கொண்டே நகம் கடிப்பதை பார்த்திருக்கிறேன். எதனால் நகம் கடிக்கிறார்கள், அதை எப்படி நிறுத்துவது என்றெல்லாம் இந்த கட்டுரையில் தெளிவாக சொல்லியிருப்பது பயன்தருவதாக இருக்கிறது. நல்லவேளை, எனக்கு நகம் கடிக்கும் பழக்கம் இல்லை!



  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%