tamilnadu epaper

அனுபவம்புதுமை

அனுபவம்புதுமை


இன்று பிறந்தநாள்..எங்காவது போகலாமா என்று தோன்றியது..


பழனிக்குப் போனதே இல்லை..


சின்னவயதிலிருந்து பழனி முருகன் மேல் ஒரு ஈர்ப்பு...

 

வடபழனி மேவியே வாழ்கின்ற முருகா.. வடபழனி என்ற ஒரு ஊர் இருக்கு என்பதும் அப்போது தெரியாது.


இதில் நேர்மையாக போட்டியில் ஜெயித்துக் பரிசென்னவோ அண்ணனுக்கே..அதனால் இவர் மேல் ஒரு வாஞ்சை.


கோயம்புத்தூரில் திருமணமாகி வாழப்போகிறோம் என்றவுடன் மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்டில் (இம்மாதிரி நிறைய பஸ் நிலையம் அப்பக் கிடையாது) கோயம்புத்தூர் வண்டியைப் பார்க்கும் போதெல்லாம் வழி பழனி பொள்ளாச்சி என்றிருந்தால் அடிக்கடி வருவேனே என்று சொல்லிக் கொள்வேன்.


ஆனாலும் பார்க்கவே முடியவில்லை.


அவர் இருந்தபோதும் திருத்தணி, திருச்செந்தூர், சுவாமி மலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை பார்த்தாயிற்று..பழனி போகணும் என்று தோன்றவில்லை போலும்.


எனவே "பழனி போகலாமா?" என்றவுடன் "சரி" என்று கிளம்பிவிட்டேன்.


ஆனாலும் மனதுக்குள் ஒரு உறுத்தல். "மலை ஏறக்கூடாதே, வருடாப்தீகம் அம்மாவிற்கு இன்னும் ஆகவில்லையே", என்று.


"அப்படி என்றால் பழனிக்குப் போவோமா?" என்று கேட்பானேன் என்ற எண்ணமும் வந்ததால், முருகனைப் பார்க்க விரும்பியதாலும் கிளம்பினேன்.


பழனிக்கே பஸ்கள் நிறைய இருந்தபோதும் நாங்கள் போகும் சமயம் பொள்ளாச்சி பஸ் மட்டுமே கிடைத்தது. கூட்டமும் அதிகம்.அதனால் பொள்ளாச்சி போய் மாறிக்கலாம் என்று.


பாதி தூரம் போனதும் அவள் "அடடா காணிக்கையை மறந்து வைத்துவிட்டேன், இப்போது வீட்டிற்குப் போகலாமா?" என்றாள்.


"வேண்டாம் வித்யா, நாம் பொள்ளாச்சி கோட்டீஸ்வரர் சுவாமி குடிலுக்குப் போகலாமா?" என்றேன்.


சிறிது யோசனைக்குப் பிறகு "வேண்டாம் ,வேண்டாம் !பழனிக்கே போகலாம்", என்றாள்.


"சரி, உங்களுக்கு என்ன தயக்கம்?" என்று சொல்ல, "இல்லை , அம்மா வருடாப்திகம் இன்னும் ஆகல," என்றேன்.


"பரவாயில்லை, போகலாம்!", என்றாள்


திரும்பவும் பழனி பஸ்ஸில் ஏறியாகிவிட்டது.


அதற்குள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு "வரலையான்னு" போன் வந்தது


கேட்டுக் கொண்டிருந்த வித்யா "நீங்கவேணா பழனியிலிருந்து மதுரை போங்க! நான் தனியாக போய்க் கொள்கிறேன்", என்றாள்


"இல்ல, நாளைக்குப் பேரனுக்கு சாதம் ஊட்டறாங்க குருவாயூரில், அது சரிப்படாது?" என்றேன்


பழனி வந்தாயிற்று..


குதிரை வண்டியைப் பார்க்க அதில் பயணம் பண்ண ஆசை. ஆனால் அதையே அவன் காசாக்கப் பார்க்கப் பிடிக்கவில்லை.


"நடக்கலாம்", என்று நடந்தோம்.


திருஆவினன்குடி கோவிலிலும் நிறையக் கூட்டம்.


சாமி பார்த்தாயிற்று..


"உங்களால் மலை ஏறமுடியுமா?"..


"முடியும் ! போகலாமே?"..


"வேண்டாம், உங்களப் பத்திரமாகப் கூட்டிப் போகணும்", என்றாள்


"நான் ஆரோக்கியமாகத்தானே இருக்கேன்!", என்றேன்


"சாப்பிடவில்லை, முகம் வாடிவிட்டதே".


"மூஞ்சியே அப்படிதான்", என்றேன்


"அதுதான் பொள்ளாச்சியில் டீ குடிச்சோமே..போதும்", என்றேன்.


"விஞ்ச்சா, நடத்தலா?"..


அதிகமாக யோசனை பண்ணி பண்ணி, விஞ்ச்சுக்கு நடந்தாச்சு.


அங்க ஏக கூட்டம்..


"இனி நாலு மணிக்குத் தான்", என்றார்கள்.

அதற்குள் மலை ஏற்றிவிட்டு வந்துவிடலாம். என்றாள்.


"நடப்போமா", என்றாள்


"நான் நடக்கிறேன் என்றுதானே சொன்னேன்"


விநாயரை வணங்கிவிட்டு ஒரு பத்தடி கூட ஏறி இருக்கமாட்டோம், அங்குள்ள பூசாரி தலையில் கைவைத்து ஏதோ சொல்லிவிட்டு, "இங்கேயே இரு", என்றார்


"அப்போ ஏற வேண்டாமா?" என்றது மனது.


திரும்பவும் "இது ஏழு கன்னிகள் கோவில் பார்க்கலாம்!", என்றாள் வித்யா. அதனையும் பார்த்து விட்டு முதல் படியில் காலை வைக்க 'லப்டப்' சப்தம் எனக்கே கேட்கிறது.


"இதென்ன சோதனை! அவங்க பயந்துக்க போறாங்களேன்று, நீங்க போங்க, நா மெதுவா வரேன்னு", சொல்ல, அவங்க "என் கையைப் பற்றிக் கொண்டு நானும் மெதுவாக நடக்கிறேன்", என்றாள்


"இது சரிப்படாது!" என்று தோன்றவே "என்னால் ஏற முடியல, நான் (இங்கேயே இரு என்று சொன்னதே சரி என்று) உட்கார்ந்து விட்டேன்.


"பயப்படாமல் போய் வாருங்கள்", என்று அவர்களை அனுப்பிவிட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.


"சரி! சுப்பிரமணியைப் பார்ப்பது இப்போது இல்லை", என்ற நினைப்பு வந்தவுடன் "உன் உருவத்தையாவது பார்க்கணுமே", என்றது மனம்


எனக்கு உன் உருவம் எப்படியாவது வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, சிறுவயதில் மனப்பாடமாக "சீர்பரமன் கண்ணுதலில் என்ற நூற்றியெட்டு முருகன் ஸ்லோகமும் ஷஷ்டி கவசமும் சொல்ல ஆரம்பித்தேன், ஒன்றன் பின் ஒன்றாக"


மெதுவாக அங்கும், இங்கும் பார்க்க, "அவர் என்னைப் பார்த்துக் கொண்டு எப்போதோ நிற்கிறார், நான் அவரைப் பார்க்கத்தான் சமயம் வரவில்லை! என்று தோன்றுமளவுக்கு என் வலப்புறத்தில் மேலாக சிரித்துக் கொண்டிருக்கும் இந்தச்சிலையைக் கண்டேன்".


பழனி முருகனைத் தரிசிக்கும் போது "ஆண்டிக் கோலத்தில் பார்த்தால் திரும்பவும், ராஜஅலங்காரத்தில் பார்க்கணும்", என்று எங்க ஊரில் கேள்விப் பட்டது மனதில் ஒலிக்க  


"அப்போ, மலை மேல் இருப்பவர் நாம் பார்க்கும் கோலத்தில் இல்லையோ?" 


"இங்கேயே இரு", என்று ஆனைமுகன் சொன்னது "இவரைப் பாரேன்" என்பதோ..


ஸ்ரீ ரங்கத்தில் சில சமயம் காவேரி வற்றிப் போன போது, "காவேரி இங்கு ஓடும் என்றால் நம்மாத்து கிணற்றுத் தண்ணீரில் காவிரி இருக்க மாட்டாளா?" என்று சொல்லும் மாமாவின் ஞாபகம் வர, 


"பழனியில் எங்கும் நீதானே.!".


"ராஜ அலங்காரத்துடன் கண்குளிர கண்டுவிட்டு, மலை ஏறாமல்".."சுப்பிரமணியைப் பார்க்க இன்னொரு சமயம் உண்டு, அப்படியானால் என் ஆயுளும் அதிகரிக்கும், ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்ற புதிய தெம்புடன் கோவைக்குப் பஸ் ஏறினேன்...



-K.BANUMATHINACHIAR

SIVAGIRI