அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியா, மெக்சிகோ, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: “நாங்கள் தங்க அட்டை ஒன்றை விற்பனை செய்ய இருக்கிறோம். க்ரீன் கார்டு போல இது கோல்டு கார்டு. இந்த அட்டைக்கு நாங்கள் 5 மில்லியன் டாலர்கள் என விலை நிர்ணயம் செய்துள்ளோம். இதில் க்ரீன் கார்டில் இருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
இது குடியுரிமைக்கான ஒரு வழியாகும். பணக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு இந்த கார்டை பெற்று வரலாம். அவர்கள் இங்கே வசதியுடனும், வெற்றிகரமாகவும் இருப்பார்கள். அவர்கள் நிறைய பணம் செலவு செய்வார்கள், நிறைய வரி செலுத்துவார்கள். நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவார்கள்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டம் இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்றும், இதற்கு காங்கிரஸின் ஒப்புதலை பெறவேண்டிய அவசியம் தனது நிர்வாகத்துக்கு இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.
அமெரிக்காவில் குடியேறும் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து கிரீன் கார்டுகளைப் பெற அனுமதிக்கும் தற்போதைய EB-5 என்ற திட்டத்துக்கு இது மாற்றாக இருக்கும் என்று அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி
வாஷிங்டன்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத, நிதி உதவிகளை படிப்படியாக நிறுத்தி வருகிறார்.
இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல் நாளில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச் சர் மார்கோ ரூபியோவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாரவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்போது ரியாத்தில் அமெரிக்க, ரஷ்ய பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் பங்கேற்க உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் வாஷிங்டனில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பிறகு அதிபர் மெக்ரான் நிருபர்களிடம் கூறும் போது, “உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும். உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறும்போது, “உக்ரைன் போருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நான் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான நேரத்தில் மாஸ்கோ செல்வேன்” என்று தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் கூறும் போது, “போரை நிறுத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்க வேண்டும். முதல்கட்டமாக அமெரிக்கா, ரஷ்யா இடையே நம்பிக்கையை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்யவும் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.