tamilnadu epaper

அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது’ - ஜக்தீப் தன்கருக்கு திருச்சி சிவா பதிலடி

அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது’ - ஜக்தீப் தன்கருக்கு திருச்சி சிவா பதிலடி

சென்னை:

குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்த நிலையில், ”அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது” என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா பதிலடி கொடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது.


ஆளுநர்கள் மற்றும் குடியரசுத்தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவு படுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைக்குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை! இந்திய ஒன்றியத்தில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.


ஜக்தீப் தன்கர் பேசியது என்ன? டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை தீயணைப்பு வீரர்களும் போலீஸாரும் பார்த்துள்ளனர். ஆனால் இது தொடர்பான தகவல் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் ஊடகங்களில் வெளியானது. இதைப் பார்த்து நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாமதமாக இந்த தகவலை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். நாட்டு மக்களால் மதிக்கப்படும் நீதித் துறை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது.


மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவரை வழிநடத்தும் சூழ்நிலை ஜனநாயகத்தில் இருக்க முடியாது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவருக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.