tamilnadu epaper

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 மடங்கு உயர்வு

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை  பெறுவோர் எண்ணிக்கை 3 மடங்கு உயர்வு


நாகர்கோவில், ஏப்.12–

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2, 3 மடங்கு உயர்ந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5.90 கோடி ரூபாய் செலவில் 15 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் கட்டண படுக்கை பிரிவு திறப்பு விழா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது. கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார்.மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ராமலட்சுமி வரவேற்றார்.மாநகராட்சி மேயர் மகேஷ், மனோ.தங்கராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் பேசினர்.

விழாவில் புதிய கட்டடங்களுக்கான கல்வெட்டை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

 கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் எண்ணிக்கை 1200 ஆகும். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளின் சேவை மிகச் சிறப்பாக இருப்பதை உணர்ந்துதான் மக்கள் அரசு மருத்துவமனை சேவையை நாடி வருகின்றனர். 

2021 ம் ஆண்டுக்கு பிறகு அரசு மருத்துவமனைகளில் சேவை பெறுவோரின் எண்ணிக்கை தமிழ்நாடு முழுவதும் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. டாக்டர்கள் மட்டுமின்றி மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் ஒத்துழைப்போடுதான் இந்த இலக்கை எட்டி இருக்கிறோம்.

இந்தியாவிலேயே மலை மலைப்பகுதிகளில் சிம்லாவுக்கு பிறகு தமிழகத்தில் ஊட்டியில் அண்மையில் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார். இந்த ஆஸ்பத்திரி மூலம் ஆறு வகையான பழங்குடி மக்கள் பயடைந்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே மக்களை தேடி மருத்துவத் திட்டத்தை சமதளப் பகுதியில் உள்ள களப்பணியாளர்கள் பணியை மேற்கொள்வது எளிது. ஆனால் மலை கிராமங்களில் இந்த பணியை செய்வது சவாலான ஒன்று. இந்த பணியில் ஈடுபடும் மகளிரை மனதார பாராட்டுகிறேன். சமீபத்தில் ஐநா சபையின் பொது சபை கூட்டத்தில் தொற்றா நோய்களுக்கு வீடுகளுக்கு தேடிச்சென்று மருத்துவ சேவை வழங்கும் நாடு எந்த நாடு என்று ஆராயப்பட்டது .அதில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு தான் இந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறது என்பது கண்டறியப்பட்டது. அதற்காக ஐநா சபையால் விருது வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்

மாவட்ட சுகாதார துணை இயக்குநர் (பொறுப்பு)டாக்டர் பிரபாகரன் நன்றி கூறினார்.