tamilnadu epaper

அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கையால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மா.சு.

அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கையால்  நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மா.சு.


சென்னை, ஏப். 22–

 “அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையால், நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சட்டசபையில், அவர் பேசியதாவது:

தி.மு.க., அரசு பொறுபேற்று, நான்கு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை, மக்களிடையே அதிகரித்துள்ளது. அதன் பயனாக, 56 சதவீதம் புற நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல், உள்நோயாளிகள் 43 சதவீதம்; அறுவை சிகிச்சைகள் 61 சதவீதம் உயர்ந்துள்ளன.முன்பு உயர்தர மற்றும் நடுத்தர மக்கள், 20 சதவீதம் பேர் மட்டுமே, அரசு மருத்துவமனைக்கு வந்தனர். 

அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்ட கட்டண படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 40 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதற்கு நோய் அதிகரிப்பு காரணம் இல்லை. அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கை தான் முக்கிய காரணம்.


மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால், தொற்றாநோய் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் தினமும் 1,700 முதல் 1,800 வரை நடக்கும் உயிரிழப்புகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. விரைவில், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும்.

மருத்துவ நுால்கள், 23 ஏற்கனவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. விரைவில், மேலும் 26 நுால்கள் மொழிபெயர்க்கப்படும். மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு சாதனைகளுக்காக, அ.தி.மு.க., ஆட்சியில், 69 விருதுகள் பெறப்பட்டன. 


கடந்த நான்கு ஆண்டுகளில், 785 மத்திய அரசு விருதுகள் உட்பட பல்வேறு அமைப்புகளிடமிருந்து, 1,500க்கும் மேற்பட்ட விருதுகள் பெறப்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளில் 463 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 90 சதவீதம் செயலாக்கத்தில் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.