tamilnadu epaper

அருஞ்சுவை பழரசம்

அருஞ்சுவை பழரசம்


            வாசல் அழைப்பு மணி ஒலித்தது. எவராய் இருக்கும்? கொரியர் ஏதாவது வந்திருக்குமா? ஸ்விக்கியில் எதுவும் நான் எதுவும் ஆர்டர் செய்யவில்லையே. ஜயம் மாமி யோசனையில் இருந்து விடுபட்டு மெதுவாக எழுந்து வருவதற்குள் மூன்று நான்கு முறை ஒலித்த வாயில் அழைப்பு மணி; அவள் செவியில் நாராசமாய் எதிரொலிக்க; வந்ததே, அவளுக்கு ஒரு கோபம்! எரிச்சலுடன் ' யாரது? என்ன வேண்டும்?' என்று சொல்லிக்கொண்டே வாசல் கதவை திறந்தவளுக்கு; வந்த கோபம் காற்றில் கரைந்தது. 

                      அக்கம் பக்கத்து ஐந்தாறு குழந்தைகள் ஏழெட்டு வயதில். கையில் ஒரு நோட்டு புத்தகம், பேனாவுடன்.

                 ' என்ன சமாச்சாரம்? என்று கேட்டுக் கொண்டே பவள மல்லி மரத்தின் அடியே இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார, குழந்தைகள் ஜயத்தை வட்டமிட்டு நின்றன. 'பாட்டி! என்ற ஜான்சி கிஷோரைப் பார்க்க, அவன் அனந்தனைப் பார்த்து ' நீ சொல்லுடா' என்று சைகை காட்ட, அவன் சாராவை பார்க்க; அவள்' பாட்டி! நாங்கள் இந்த வெயில் காலத்தில் ஒரு மாதம்' சர்பத் கடை' போடப் போகிறோம். எங்கள் வீடுகள் மிகவும் சிறியவை . தோட்டமும் இல்லை உங்கள் வீடு சௌகரியமாக இருக்கும். வாசலில் இரண்டு பக்கமும் புன்னை மரமும் பூவரச மரமுமாக நிழலாய் இருக்கும். இடம் தருவீர்களா?' என்று கேட்க; ஜயம்,' தாத்தா ஊருக்குப் போயிருக்கார். அவரைக் கேட்டுச் சொல்லறேன். நீங்கள் அமர்க்களம் பண்ணுவீங்க. தோட்டம் மந்தி புகுந்த மது வனமாக ஆக்கி வைத்து விடுவீர்கள். அதான் யோசனையாக இருக்கு' என்பவளை இடை மறித்த அனந்தன்'பாட்டி! தாத்தாவிடம் ஃபோனில் பேசி விட்டோம். தாத்தா உங்களிடம் பர்மிஷன் கேட்டுக்கச் சொன்னார். நீங்கள் கேட்டைப் பூட்டிக் கொள்ளுங்கள். நாங்கள் கேட்டுக்கு வெளியேதான் கடை போடுகிறோம். தாத்தாவின் ட்யுஷன் க்ளாஸ் பெஞ்சுகள் இரண்டை உங்களைக் கேட்டு வாங்கிக்கச் சொன்னார். கஸ்டமர்கள் உட்கார தோதாக இருக்கும். கேட்டுப் பக்கத்தில் இருக்கும் குழாயிலிருந்து ட்யுப் போட்டு தண்ணீர் எடுத்துக்கவும் பர்மிஷன் கொடுத்துட்டார்.உங்க கையில்தான் எல்லாம் இருக்கிறது,' என்று கெஞ்சுதலாக கேட்க; ஜயம்,' சரிங்கடா' என்றதும், 'ஓ' என்ற இரைச்சலுடன் ஒரே கும்மாளம். சாரா, 'பாட்டி! உங்களுக்கு நூறு ரூபாய் இடத்துக்கு வாடகையாக கொடுத்து விடுகிறோம்' என்று சொன்னதும்,ஜயம் சிரிப்புடன் கட்டை விரலால் சமிக்ஞை காட்டினாள்.

                      சரி, பாட்டி! அடுத்து நாங்கள் எங்கள் ஜூஸ் கடைக்கு ஸ்பான்சர்ஷிப் முயற்சியைப் பார்க்கிறோம்' என்று சொன்னாள் ஜான்சி. 'இரு! நானே முதலில் நூறு ரூபாய் தருகிறேன். என்று தர; சிறுவர் கூட்டம் மீண்டும் குதூகலமடைந்தது. ஜான்சி அவளுடைய நோட்டில் ஸபான்ஸர்ஸ் என்ற தலைப்பிட்டு 

' ஜயம் பாட்டி' என்று எழுதி, ஒரு சிறிய அட்டையில் ஸ்பானஸ்ர்ஷிப் தொகையாக பெற்றுக் கொண்ட தொகைக்கு 'அருஞ்சுவை பழரசம்' கடையின் சார்பாக என்று முத்து முத்தாக எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தாள்.

                 வருடப் பிறப்பிற்கு முதல் நாள் குழந்தைகள் ப்ளம்பர் கண்ணாயிரத்தின் உதவியால் காம்பௌண்ட்டுக்கு வெளியே தண்ணீர் வருமாறு ஏற்பாடு செய்து கொண்டு; எலக்ட்ரீஷியன் தங்கவேல் உபயத்தில் ' அருஞ் சுவை பழ ரசம்' பதாகையும் கட்டினர். புலனத்தில் அந்த சரகத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பினதுடன் வீடு வீடாகச் சென்று ' 'அருஞ்சுவை பழரசம்' பற்றி விளம்பரம் செய்வதாக ஜயம் பாட்டி கேள்விப்பட்டாள். மூன்று மிக்ஸிகளை தங்கவேல் கொண்டு வர சாரா வீட்டு டைனிங் டேபிளில் அமர, பழங்களையும் பேப்பர் கப்புகளையும் அனந்தன் கொண்டுவர, மீதி சாமான்களை ட்யூஷன் பெஞ்சில் மீதி குழந்தைகள் மள மளவென அடுக்கினர். ஒரு மணி நேரத்தில் எல்லாம் தயாராக; கிஷோர் அழகான கையெழுத்தில் விலைப்பட்டியல் ஒரு சிறு கரும்பலகையில் எழுதப்பட்டு பூவரசு மரத்தில் தொங்க விடப்பட்டது.

                 எல்லாம் யோசித்த குழந்தைகள், முற்றும் முக்கியமான விஷயத்தை மறந்ததை ஜயம் பாட்டி மனதில் நினைத்துக் கொண்டே இருந்தாள்.அவர்கள் அறியாமல் அதற்கு ஏற்பாடும் செய்து வைத்திருந்தாள்.

                 மாம்பழத்தை நறுக்கி மிக்ஸியில் போட்ட சாராவுக்கு அப்போதுதான் தோன்றியது மின் இணைப்புக்கு அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்பது. அவள் என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்து நின்று விட்டாள். பக்கத்தில் நின்றிருந்த ஜான்சிக்கு நிலைமை புரிய கண்ணீர் நீர் முட்டி நிற்க;குழந்தைகள் யாவருக்கும் தங்கள் தவறு மனதில் உறைக்க, உறைந்து போய் நின்றனர். இப்போது என்ன செய்வது? 

              ஜயம் பாட்டி கேட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே போய் விட்டிருந்தாள். அவளிடம் கேட்ட உதவிக்கு மேலேயே அவள் செய்து விட்டிருந்த நிலையில், திரும்பவும் அவளைத் தொந்தரவு படுத்த விருப்பமில்லாமல் இருந்தது. எதேச்சையாக வருவது போல் பாட்டி வெளியே வர; அனந்தன் முன்னே போய் அவளிடம் தயங்கியபடியே அவர்களது ‌ சிக்கலான பிரச்சனையை எடுத்துச் சொல்ல, பாட்டி தங்கவேலுக்கு கண்ணால் சமிக்ஞை செய்ய அவன் தன்னிடமிருந்த எக்ஸ்டன்ஷன் போர்டின் உதவியால் ட்யூஷன் அறையிலிருந்து மின் இணைப்பு கொடுத்தான். 

                பிறகென்ன! கன ஜோராக 'அருஞ்சுவை பழரசம்' நடக்க ஆரம்பித்தது. வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்க, பிள்ளைகள் காலில் சக்கரம் கட்டியது போல் வேலைகள் செய்தனர். ஜான்சி கல்லாவில் அமர்ந்து கணக்கு வழக்கு பார்க்க; மற்றவர்கள் மற்ற வேலைகளை பகிர்ந்து கொண்டனர்.

               நான்கு மணி நேரம் வியாபாரம் நிறைவாகியது. அன்று வந்த வியாபார கலெக்ஷன் பணத்தை பாட்டியிடம் கொடுத்து,மறுநாள் பழங்கள் பேப்பர் கப்புகள் வாங்கவும் பணத்தை எடுத்துக்கொண்ட பின் அறுநூறு ரூபாய் லாபமாக நின்றது. குழந்தைகள் போட்ட குதியாட்டத்திற்கு ஜான்சி முட்டுக்கட்டை போட்டாள்; ' நாம் இட வாடகை கண்ணாயிரம் அண்ணா தங்கவேல் அண்ணா இவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். எத்தனை உதவி செய்திருக்கிறார்கள்! இலவசமாக வரும் எதுவும் நமக்கு ஒரு குறைவுதான். அதில் என்ன பெருமை இருக்கிறது? நம் வியாபாரம் மாண்புடன் இருக்க வேண்டாமா? ஒரு மாத முடிவில்தான் நமக்கு நமது பொருளாதார நிலை தெரியும். கூடுமானவரை ஸ்பான்ஸர்ஷிப் பணத்தை திருப்ப முயற்சிக்க வேண்டும் அல்லவா?' சிறு குழந்தை ஜான்சியின் இந்த அர்ப்பணிப்பு மனநிலை ஜயம் பாட்டி மனதிற்குள் மிகவும் பாராட்டினாள்.

                  'சரி! வரும் லாபத்தை என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டாள். 

                  ' தெரியல்லை; பாட்டி! இரண்டு மூன்று ஐடியா இருக்கு. இந்த மாதக் கடைசியில் தான் முடிவு எடுக்க முடியும்,' என்று ஜான்சி அமர்த்தலாக சொன்னதற்கு மறு பேச்சே இல்லை. கட்டுக் கோப்பான அவர்களுடைய நட்பு ஜயம் பாட்டிக்கு வியப்பை அளித்தது. 



-சசிகலா விஸ்வநாதன்